வளிமண்டல கீழடுக்கு சுழற்சி - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதலே சாரல் மழையும், ஒருசில பகுதிகளில் கனமழையும் பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், மாணவர்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று காலை முதல் இரவு வரை நெல்லை மாநகர மற்றும் புறநகர் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை கொட்டி தீர்த்தது.
இதேபோல், இன்றும் மாநகரப் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், நெல்லை சந்திப்பு மற்றும் சமாதானபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை நீடித்து வருகிறது. அதேபோல், மானூர், ராமையன்பட்டி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி போன்ற புறநகர் பகுதியிலும் மழை நீடித்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உடன்குடி, குலசேகரப்பட்டினம், பரமன்குறிச்சி மற்றும் மேல திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, உடன்குடி நகர் பகுதி முழுவதும் சாலையில் மழை நீர் தேங்கி உள்ளதால், மக்கள் அவதி அடைந்தனர். தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்து கொண்டும், குடை பிடித்து கொண்டும் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர்.