வளிமண்டல கீழடுக்கு சுழற்சி - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் பரவலான மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரத்தில் பட்டினம் காத்தான், ஆர்.காவனூர், பேராவூர் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்தத்து. 10 நாட்களுக்கு பிறகு பெய்த கனமழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக மதுக்கூரில் 35 மில்லி மீட்டர் மழையும், அதிராம்பட்டினத்தில் 15 புள்ளி 20 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.
கடலூரின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், சுரங்கங்களில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நிலக்கரி வெட்டி எடுப்பதில் சிக்கல் நிலவுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சின்னக்காவனம் பெரிய காவணம் நாலூர் மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு திரும்பினர் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர் நகராட்சி ஊழியர்கள் மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர் தொடர்ந்து சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.