"வழக்கமான அரசியல் வாதி அல்ல" : PODCAST நிகழ்ச்சியில் மனம் திறந்த பிரதமர் மோடி!
பிரபலமான ஜெரோதா நிறுவனத்தின் PODCAST நிகழ்ச்சியில், முதன் முறையாக பங்கேற்ற பிரதமர் மோடி, வழக்கத்துக்கு மாறாக தனது அரசியல் பயணம் பற்றியும், தன் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அனைத்து உலக நாடுகளின் தலைவர்களாலும் போற்றப்படும் பிரதமர் மோடியை, ஜெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் பேட்டி எடுத்திருக்கிறார். சுமார் 2 மணி நேரம் நடந்த அந்த உரையாடலின் வீடியோ கடந்த வெள்ளிக் கிழமை PODCAST நிகழ்ச்சியில் வெளியானது.
'தேசம் முதலில்' என்பதே எல்லோருக்கும் முக்கிய குறியீடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, தனது வழிகாட்டும் கொள்கைகள் மற்றும் இந்திய அரசியலின் எதிர்காலம் குறித்தும் பல அரிய பார்வைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
"வழக்கமான அரசியல்வாதி அல்ல" என்று தன்னை விவரித்த பிரதமர் மோடி, அரசியல் செயல்பாடுகளை விட ஆட்சி செய்வதில் தான் தனது முதன்மை கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளார்.
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் அரசியல்வாதி ஆகவில்லை என்று கூறிய பிரதமர் மோடி, யாராவது அரசியலில் வர விரும்பினால், குறிக்கோள் மட்டும் இருந்தால் போதாது என்றும், ஒரு நோக்கத்துடனும் ,சரியான திட்டத்துடனும் வர வேண்டும் என்றும் விளக்கியிருக்கிறார்.
மேலும், தான் குஜராத்தின் முதல்வராக பதவியேற்றபோது, மூன்று உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
எடுக்கும் முயற்சிகளில் எந்தக் கல்லையும் விட்டுவிட மாட்டேன் என்றும், தனக்காக எதையும் செய்ய மாட்டேன் என்றும், கெட்ட நோக்கத்துடன் தவறு செய்ய மாட்டேன் என்றும் தான் எடுத்துக் கொண்ட கொள்கைகளே தனது வாழ்க்கையின் தாரக மந்திரமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
பொறுப்புகளை திறம்பட கையாளக்கூடிய ஒரு திறமையான குழுவைத் கட்டமைப்பதன் மூலம் தனது வெற்றியை அளவிடுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, எப்போதும், அடுத்த 20 ஆண்டுகளுக்கான பணியை செய்ய ஒரு அணியை தயார்படுத்துவதைத் தொடர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
"குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்" என்பது அமைச்சகங்கள் அல்லது ஊழியர்களைக் குறைப்பது அல்ல என்றும், மாறாக செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதைக் குறிக்கிறது என்பதையும் இந்த உரையாடல் மூலம் பிரதமர் மோடி, தெளிவுபடுத்தி யிருக்கிறார்.
2002 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, முதன்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது நாளில் கோத்ரா கலவரம் நடந்தது என்று கூறிய பிரதமர் மோடி, ஒரே நாளில் ஐந்து இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன என்றும், ஒற்றை இன்ஜின் ஹெலிகாப்டர் மட்டுமே இருந்ததால், முதல்வரை அழைத்து செல்ல அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும், என்ன நடந்தாலும் அதற்கு தான் பொறுப்பு என வாதிட்டு, உடனடியாக கோத்ராவுக்குச் சென்றதாகவும், விவரித்திருக்கிறார்.
அமெரிக்காவால் விசா மறுக்கப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, விசா மறுப்பை, ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், நாட்டுக்கும் அவமரியாதையாக உணர்ந்ததாகவும், அதனால், இந்திய விசாவுக்காக உலகம் வரிசையில் காத்து நிற்கும் காலம் வருமென்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாகவும் விவரித்தார். விசா மறுக்கப்பட்டு 20 ஆண்டுகளான நிலையில், தற்போது இந்தியாவின் நேரம் தொடங்கிவிட்டதை காண முடிகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
மோடி 3.0 யில் தனது கனவுகள் விரிவடைந்துள்ளதாகவும், 2047 ஆம் ஆண்டுக்குள் "விக்சித் பாரதம்" என்ற அமைப்பை உருவாக்குவதே இலட்சியமாக உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்
தனது பள்ளி பருவ காலங்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, தேர்ச்சி பெறுவதற்காகப் படித்த ஒரு சாதாரண மாணவராகவும், ஏட்டுக் கல்விக்கு அப்பால் செயல்பாடுகளில் சிறந்து விளங்கியதாகவும் விவரித்திருக்கிறார்.
தனது வாழ்க்கைப் போராட்டங்களே தனது "பல்கலைக்கழகம்" என்று பாராட்டிய பிரதமர் மோடி, குடும்பத்தில் நிதி நெருக்கடி காரணமாக, ராணுவப் பள்ளியில் சேர முடியாமல் போனாலும், மன உறுதியை இழக்கவில்லை என்பதையும் தெரிவித்திருக்கிறார்.
வசதியான, சுகமான வாழ்க்கையை தான் வாழாதது தன் அதிர்ஷ்டம் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, அதனால் தான் எப்போது என்ன செய்ய வேண்டும் என்று அறிந்துகொள்ள முடிந்தது என்றும், அதனால்தான், தன் வாழ்க்கையில் நடந்த சிறிய விஷயங்கள் கூட தனக்கு திருப்தியைத் தருகின்றன என்று பெருமிதமாக கூறியிருக்கிறார்.
பாட்காஸ்டின் டிரெய்லரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பிரதமர் மோடி, உங்களுக்காக இதை உருவாக்குவதில் நாங்கள் மகிழ்ந்ததைப் போலவே நீங்கள் அனைவரும் இதை ரசிப்பீர்கள் என்று நம்புவதாக எழுதியிருந்தார். உண்மையில், ரசிக்க மட்டுமல்ல, பிரதமர் மோடியை எண்ணி பெருமை கொள்ளவும் வைத்திருக்கிறது என்று மக்கள் பாராட்டுகிறார்கள்.