ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரத்தை இணைப்பது தொடர்பாக வரும் 18-ம் தேதி உள்துறை செயலாளருடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை நடத்தவுள்ளார்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என மத்திய அரசிடம் இந்திய தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது.
இதனடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்படாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரத்தை இணைப்பது தொடர்பாக உள்துறை செயலாளருடன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டமானது வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது.