வாக்குச்சாவடி மைய சிசிடிவி காட்சி - ஆய்வுக்கு உட்படுத்த தடை விதிக்கும் வகையில் தேர்தல் விதி திருத்தம்!
வாக்குச்சாவடி மையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த தடைவிதிக்கும் வகையில் தேர்தல் விதியில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு அதிகாரிகள், வாக்குச்சாவடி மையங்களில் பதிவாகும் சிசிடிவி காட்சிகளை வெளியிடுவதன் மூலம் வாக்காளர்களின் ரகசியம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமன்றி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சிசிடிவி காட்சிப் பதிவுகள் போலியாக மாற்றப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.
சட்ட விதியில் குறிப்பிடப்பட்டுள்ள காகித ஆவணங்கள் மட்டும் பொது ஆய்வுக்கு வைக்கப்படும் என்றும், விதியில் இல்லாத ஆவணங்கள் பொது ஆய்வுக்கு அனுமதிக்கப்படாது எனவும் இந்த திருத்தத்தின் மூலம் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பல்வேறு நீதிமன்ற வழக்குகள் காரணமாகவே இந்த திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.