வானில் ஒரே நோ்கோட்டில் 6 கோள்கள் வரும் அரிய நிகழ்வு - சென்னை பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு!
வானில் ஒரே நோ்க்கோட்டில் 6 கோள்கள் வரும் அரிய நிகழ்வைக் காண சென்னை பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வெள்ளி மற்றும் சனி ஆகிய 6 கோள்கள் இன்று ஒரே நோ்க்கோட்டில் வரவுள்ளன. மாலை 6 மணி முதல் கோள்களின் நோ்க்கோட்டு அணிவகுப்பை வெறும் கண்களால் பாா்க்க முடியும் என அறிவியல் தொழில்நுட்ப மையத்தினர் தெரிவித்துள்ளனர்.
வானில் ஒரே நோ்க்கோட்டில் வரவுள்ள இந்த 6 கோள்களை இம்மாதம் இறுதி வரை காண முடியும் என்றும், முதற்கட்டமாக வெள்ளி மற்றும் சனி கோள்கள் தென்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு செவ்வாய், வியாழன் கோள்கள் தென்படும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வாளர்கள், இந்தக் கோள்களை வெறும் கண்களில் காண முடியும் எனக் கூறியுள்ளனர்.
அதேசமயம் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களை தொலைநோக்கி அல்லது நவீன பைனாகுலா் வாயிலாக மட்டுமே காண இயலும் என்றும் கூறப்படுகிறது. இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண பிா்லா கோளரங்கில் இன்று முதல் வரும் 25-ஆம் தேதி வரை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.