விகல்ப் யோஜனா திட்டம்! : பயணிகள் பலன் பெறுவது எப்படி?
வெயிட்டிங் டிக்கெட் வைத்திருக்கும் ரயில் பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் விகல்ப் யோஜனா திட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது. ரயில் டிக்கெட்டுகளை உறுதிப்படுத்த இந்த திட்டம் எவ்வாறு உதவுகிறது? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
பொதுவாகவே, இந்தியாவில் பண்டிகை காலம், ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி முதலே தொடங்கிவிடும். பிறகு நவராத்திரி திருவிழா, தீபாவளி,மகா சஷ்டி, திருக்கார்த்திகை என தொடர்ந்து, தை மாதம் பொங்கல் வரை கொண்டாடப் படுகிறது.
வெளியூரில் இருக்கும் மக்கள், பல்லாயிரக்கணக்கில் பண்டிகை காலத்தில் தங்கள் சொந்த ஊருக்குச் செல்கிறார்கள். அதற்காக, உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுக்களைப் பெறுவது பெரும்பாலான மக்களுக்கு ஒரு சவாலாகவே உள்ளது.
பண்டிகை காலம் என்று மட்டும் இல்லை. எப்போதுமே ரயிலில் CONFIRM டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாகவே இருக்கிறது. ரயில்வே துறையில், டிக்கெட் முன்பதிவு செய்ய பல்வேறு வசதிகள் இருந்தாலும், பல சமயங்களில் CONFIRM டிக்கெட் கிடைக்காமல் போகின்றன.
CONFIRM டிக்கெட் பெறுவதை எளிதாக்கும் வகையில், இந்த விகல்ப் யோஜனா திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகப் படுத்தியது.
கடந்த நிதியாண்டில், விகல்ப் திட்டத்தின் கீழ், வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்த 57,200 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு, மாற்று ரயில்களில் இருக்கைகள் கிடைத்துள்ளது என மாநிலங்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
விகல்ப் திட்டத்தின் கீழ், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் உள்ள பயணிகளுக்கு CONFIRM டிக்கெட் வழங்கவும், ரயிலில் உள்ள காலி இருக்கைகளை அதிகபட்சமாக பயன்படுத்துவதை உறுதி செய்யவும், மாற்று ரயில்களிலும் இருக்கைகள் ஒதுக்கப் படுகின்றன.
விகல்ப் திட்டம் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கைக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்றாலும், இருக்கை கிடைப்பது மாற்று ரயில்களைப் பொறுத்தது.
விகல்ப் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை. கூடுதலாக, பயணிகள் மாற்று ரயிலை தேர்ந்தெடுக்கும் போது, அதன் புறப்படும் நேரத்தை உறுதிசெய்ய வேண்டும்.
ஏனெனில் தாங்கள் முதலில் தேர்ந்தெடுத்த ரயிலை விட 12 மணிநேரம் முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ இருக்கலாம்.
வெயிட்டிங் லிஸ்ட் பயணிக்கு, மற்றொரு ரயிலில் இருக்கை உறுதி செய்யப்பட்டவுடன், பயணி தனது முந்தைய முன்பதிவுக்கு மாற்ற முடியாது.
உறுதி செய்யப்பட்ட மாற்று ரயில் டிக்கெட்டை வேண்டுமானால் ரத்து செய்யலாம். ரத்து செய்வதற்கு தனியாக கட்டணங்கள் உண்டு.
இரயில் பயணத்துக்கான இருக்கை கிடைத்தவுடன், டிக்கெட் தானாகவே CONFIRM ஆகிவிடும். இருக்கையை மாற்றியமைத்தவுடன், முதலில் தேர்ந்தெடுத்த ரயிலில் பயணிக்க முடியாது என்பது குறிப்பிடத் தக்கது.
விகல்ப் திட்டத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.
முதலில், IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது MOBILE APP க்குள் செல்லவேண்டும்.
புறப்படும் மற்றும் சேருமிட நிலையங்கள், பயணத் தேதி மற்றும் ரயில் வகுப்பு போன்ற பயணத் தகவலை கொடுக்கவேண்டும்.
பயணிகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து டிக்கெட் முன்பதிவு செயல்முறையைத் தொடங்க வேண்டும். இதற்கு பிறகு, கட்டணம் செலுத்தும் முன், "விகல்ப்"என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
"விகல்ப்" என்பதைத் தேர்ந்தெடுத்த பிறகு, தேர்ந்தெடுத்த பாதையில் இயங்கும் மாற்று ரயில்களின் பட்டியல் இருக்கும். அவற்றில் விருப்பமான ரயில்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
டிக்கெட் முன்பதிவு செயல்முறை முடிந்ததும், உங்கள் PNR நிலையை சரிபார்க்க வேண்டும்.
விகல்ப் யோஜனாள என்பது முன்பதிவு செய்துவிட்டு வெயிட்டிங் லிஸ்டில் உள்ள ரயில் பயணிகளுக்கு கேம் சேஞ்சர் ஆகும்.