விக்கிரவாண்டி தவெக மாநாடு பிரம்மாண்ட சினிமா ஷூட்டிங் - அமைச்சர் ரகுபதி விமர்சனம்!
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்தியது மாநாடு அல்ல, அது ஒரு பிரம்மாண்டமான சினிமா ஷூட்டிங் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் முன் மண்டபம் கட்டுவதற்கு கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது இதில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பூமி பூஜை பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :
திராவிட மாடலின் ஆட்சியை மக்கள் மத்தியில் இருந்து அகற்ற முடியாது என்பதை நேற்று நடிகர் விஜய் வெளியிட்டுள்ள ஜெராக்ஸ் காப்பியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும். எங்களது கொள்கைகளுக்கு அவர்கள் விளக்கம் மட்டுமே மாநாட்டில் கொடுத்துள்ளனர்.
தமிழக முதல்வர் முன்னெடுத்து செல்லும் கொள்கைகளை தமிழக மக்கள் மத்தியில் இருந்து யாரும் பிரித்து விட முடியாது. நேற்று நடைபெற்றது மாநாடு என்பதைவிட பிரமாண்டமான சினிமா சூட்டிங் என்றே சொல்லலாம்
தேர்தலில் வெற்றி பெற்று அவர்கள் ஆட்சிக்கு வரட்டும் அதன் பின்பு கூட்டணியில் பங்கு கொடுப்பது பற்றி பார்க்கலாம் , திமுகவின் கூட்டணியை யாரும் உடைத்து விட முடியாது/ முதல்வரின் பாசத்தால் கூட்டணி தலைவர்கள் கட்டுப்பட்டு உள்ளனர்/
ஆகவே எங்களை விட்டு யாரும் போக மாட்டார்கள்.
அதிமுக என்ற கட்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது தெரிந்து தான் அவர்களைப் பற்றி பேசவில்லை. அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இழுப்பதற்காகத்தான் விஜய் அவர்கள் குறித்து எதுவும் பேசவில்லை.
ஊழலைப் பற்றி பேச வேண்டுமெனில் 2011 முதல் 2021 வரையிலான ஆட்சியில் நடந்த ஊழலை பற்றி தான் பேச வேண்டும் 2021 முதல் 2026 இல் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை யாராலும் பேச முடியாது நாங்கள் எந்த ஒரு ஊழலிலும் ஈடுபடவில்லை என ரகுபதி தெரிவித்தார்.