விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகல்!
கட்சி விதிகளை மீறி செயல்பட்டதாகக்கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா, அக்கட்சியிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
Advertisement
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்ததாக தெரிவித்துள்ளார்.
தற்போது மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் தன்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப் பொருளாக மாறியதாக குறிப்பிட்டுள்ள ஆதவ் அர்ஜுனா, தனக்கும், கட்சிக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னைப் பற்றி தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் கட்சியிலிருந்து முழுமையாக வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜுனா, வரும் காலங்களில் மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் தனது அரசியல் பயணம் தொடரும் என தெரிவித்துள்ளார்.