விசிக கொடி கம்ப விவகாரம் - வருவாய் துறையினர் போராட்டம்!
மதுரையில் விசிக கொடி கம்ப விவகாரத்தில் 3 வருவாய் ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறையினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் விசிக கொடி கம்பத்திற்கு அனுமதி அளித்த விவகாரத்தில், கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி 3 வருவாய் ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வருவாய்த்துறை அலுவலகம் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தால் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தமிழ்நாடு வருவாய்த்துறை அதிகாரிகள் சங்க மாநில தலைவர் முருகையன், 3 வருவாய்த்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அவ்வாறு ரத்து செய்யவில்லையெனில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.