விஜய்யின் முதல் மாநாடு பேச்சை வைத்து கருத்து கூற முடியாது! - வானதி
தவெக முதல் மாநாட்டில் விஜய் பேசியதை வைத்து எந்த கருத்தையும் கூற முடியாது எனவும், வருங்காலங்களில் அவரது செயல்பாடுகளை வைத்தே கருத்து கூற முடியும் எனவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் அமைந்துள்ள குஜராத் சமாஜ் மண்டபத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தாயின் அரவணைப்பில் மட்டுமே வளரும் 5 முதல் 12 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு, 'மோடியின் மகள்' திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன், நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக 10 ஆயிரம் ரூபாய், புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன், 'மோடியின் மகள்' திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு அனைத்து விதமான உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்றார். மேலும், புதிதாக கட்சி தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அவர், முதல் மாநாட்டின் பேச்சை வைத்து எந்த கருத்தும் கூற முடியாது என்றார்.