விண்வெளித்துறையில் மைல்கல் : SPACE X- இஸ்ரோ கைகோர்த்தது ஏன்? - சிறப்பு கட்டுரை!
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், முதன்முறையாக, இந்தியாவின் GSAT-N2 , தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோ ஸ்பேஸ் எக்ஸை தேர்வு செய்தது ஏன்? இந்த கூட்டணியால் விண்வெளித்துறையில் இந்தியா சாதிக்க விரும்புவது என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நீண்ட காலமாகவே விண்வெளி ஆராய்ச்சித் துறையில் அமெரிக்காவுடன் இந்தியாவின் இணைந்து பணியாற்றி வருகிறது. இதுவரை, அமெரிக்காவின் நாசாவுடன் மட்டுமே இணைந்து பணியாற்றிய இஸ்ரோ, முதல்முறையாக தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான எலான் மஸ்க்கின் SpaceX உடன் இணைந்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை, இஸ்ரோவின் ஜிசாட்-என்2 என்ற கனரக தகவல் தொடர்பு செயற்கைக்கோள், அமெரிக்காவிலுள்ள Cape Canaveral Space Force Station தளத்தில் இருந்து SpaceX-ன் பிரபலமான பால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது.
4,700 கிலோகிராம் கொண்ட ஜிசாட் என்-2, தொலைத்தொடர்பு செயற்கைக்கோள், ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் 34 நிமிடத்தில் விண்ணில் நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 35,786 கிமீ உயரத்தில் உள்ள புவிசார் சுற்றுப்பாதையில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், திட்டமிட்டபடி ஏவிய எட்டரை நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பூமிக்கு வந்து சேர்ந்தது ஃபால்கன் 9 ராக்கெட். இந்த செயற்கை கோள் செலுத்துவதற்கு மதிப்பிடப்பட்ட மொத்த செலவு 60-70 மில்லியன்அமெரிக்க டாலர் ஆகும்.
இந்தியாவின் அதிவேக பிராட்பேண்ட் இணைய தேவைகளைப் பூர்த்தி செய்வதே இந்த செயற்கை கோளின் நோக்கமாகும். மேலும் இந்த செயற்கைகோள், டிஜிட்டல் வீடியோ மற்றும் ஆடியோ டிரான்ஸ்மிஷனை வழங்கும்.
இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவு நிறுவனமான NewSpace India Limited நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் துரைராஜ், இந்தியாவின் ஜிசாட்-என்2 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் துல்லியமான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜிசாட்-என்2 என்பது இந்தியாவின் தொலைத்தொடர்பு கட்டமைப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட நவீன செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள் 48 ஜிபிபிஎஸ் தரவு பரிமாற்ற திறன் கொண்டதாகும். ஜிசாட்-என்2 செயற்கை கோள், 14 வருட ஆயுட்காலம் கொண்ட ( KA- BAND) கா-பேண்ட் உயர் தகவல் தொடர்பு பேலோடைக் கொண்டுள்ளது.
Ka-Band HTS தொடர்பு பேலோட் சுமார் 48 Gbps செயல்திறனை வழங்குகிறது. இதனால், இந்தியாவில் தொலைதூரப் பகுதிகளிலும் வேகமான இன்டர்நெட் இணைப்பை வழங்க முடியும். செயற்கைக்கோள் செயல்பாட்டிற்கு வந்ததும், அந்தமான் மற்றும் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு தீவுகள் உட்பட இந்தியாவின் தொலைதூர பகுதிகளில் இணைய சேவைகள் தடையின்றிக் கிடைக்கும்.
இந்த செயற்கைக்கோள், நாட்டின் விமானம் மற்றும் கடல்சார் தொலைத்தொடர்பு இணைப்பு (IFMC) இணைய சேவைகளுக்கான தேவைகளையும் பூர்த்தி செய்யும். மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
GSAT-N2 செயற்கை கோளின் திறனில் 80 சதவீதம் தனியாருக்கு விற்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 20 சதவிகிதம் விமானம் மற்றும் கடல்சார் துறைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 4,700 கிலோ எடையுள்ள ஜிசாட்-20 செயற்கை கோளை விண்ணில் செலுத்த அதிக உந்து திறன் கொண்ட ராக்கெட் தேவைப்பட்டது.
இஸ்ரோ பொதுவாக 4000 கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட பெரிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஐரோப்பாவின் ஏரியன்ஸ்பேஸின்( Arianespace ) ஏரியன் ராக்கெட்களைப் பயன்படுத்தி வந்தது.
ஏரியன்ஸ்பேஸின் அரியானே-6 ராக்கெட்டைப் பயன்படுத்த கமர்சியல் ஸ்லாட் கிடைக்கவில்லை என்பதால் மாற்று நிறுவனத்தைத் தேட வேண்டிய கட்டாயம் இஸ்ரோவுக்கு உருவானது. ரஷ்யா- உக்ரைன் போர் சூழலில் , ரஷ்யாவுடன் இணைத்து பணியாற்றுவது, சரியாக வராது என்பதால் இஸ்ரோ, எலான் மஸ்கின் SpaceX நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
உலகிலேயே மறுபயன்பாடு செய்யக்கூடிய ராக்கெட்களை ஸ்பேஸ்எக்ஸ் உருவாக்கி வருகிறது. குறிப்பாக ஃபால்கன் 9 ராக்கெட், சுமார் 8.3 டன் வரையிலான எடை கொண்ட செயற்கை கோளை விண்வெளி சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் கொண்டதாகும். ஒரு செயற்கை கோளை விண்ணுக்குச் செலுத்த 500 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.
இதனால், எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உதவியால், GSAT-N2 செயற்கை கோளை விண்ணுக்குச் செலுத்தியுள்ளது இந்தியா.
இந்த சூழலில், இஸ்ரோ தனது அடுத்த தலைமுறை ராக்கெட் ஆன என்ஜிஎல்வி (Next Generation Launch Vehicle)யை உருவாக்கி வருகிறது.
NGLV 8,240 கோடி ரூபாய் பட்ஜெட்டில், தயாரிக்கப் படுகிறது. LVM3 ஐ விட 1.5 மடங்கு அதிகமான பட்ஜெட்டில் NGLV உருவாக்கப்படுகிறது. எனவே, LVM 3 வகை பேலோட் திறனை விடவும் மூன்று மடங்கு அதிக திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ராக்கெட், இஸ்ரோ-வின் பயன்பாட்டு வரும் நிலையில், இஸ்ரோ சொந்தமாகவே அதிக எடை கொண்ட கனரக செயற்கைக்கோள்களை இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்தே விண்ணில் செலுத்த முடியும்.
அப்போது, Arianespace, SpaceX போன்ற நிறுவனங்களின் உதவியை நாட வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இருக்காது என்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள்.