விண்வெளியில் இந்தியா ஆதிக்கம் : குறைந்த செலவில் சாதனை - வியக்கும் உலக நாடுகள் - சிறப்பு கட்டுரை!
விண்வெளித்துறையில் இந்தியா நிகழ்த்தி வரும் சாதனைகள் ஒட்டுமொத்த உலகத்தையும் வியப்படையச் செய்திருக்கிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது குறைவான செலவில் வெற்றிகரமான ஆய்வுப் பயணங்களை மேற்கொள்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
Advertisement
நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான், சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா, செவ்வாயை சுற்றிவரும் மங்கள்யான் என ஒட்டுமொத்த உலகத்தையும் இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்.
விண்வெளித் துறையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த மூன்று நாடுகளுக்கும் சவால் விடுக்கும் வகையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.
இஸ்ரோ சார்பில் பல்வேறு விண்வெளித் திட்டங்களை மேற்கொள்வதற்காக 227 பில்லியன் ரூபாயை மத்திய அரசு சமீபத்தில் ஒதுக்கியுள்ளது. சூரியன், செவ்வாய், நிலவுப் பயணத்தைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக வெள்ளி கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பவும், இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு மையத்தை தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகளும் தொடங்கியுள்ளன. மேலும் செயற்கைகோள்களை ஏவுவதற்கான புதிய மறுபயன்பாட்டு கனரக ராக்கெட்டுகளையும் உருவாக்க இந்தியா முயற்சி செய்து வருகிறது.
செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்ப 74 மில்லியன் டாலர்களையும், கடந்த ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான் திட்டத்திற்கு 75 மில்லியன் டாலர்களையும் இந்தியா செலவிட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டல வாயுக்களை ஆய்வு செய்வதற்காக நாசா உருவாக்கிய மேவன் விண்கலத்திற்கு 582 மில்லியன் டாலர்களும், சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளான ரஷ்யாவின் லூனா -25 விண்கலத்திற்கு 133 மில்லியன் டாலர்களும் செலவாகியுள்ளது. குறைவான செலவில் நிறைவான ஆய்வுப் பயணங்களை மேற்கொள்ளும் இஸ்ரோவின் வெற்றிப் பயணத்திற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் அமைந்திருக்கின்றன.
உள்நாட்டு தொழில் நுட்பங்கள் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்துவதால் இஸ்ரோவின் பணிகளுக்கு மிகக் குறைவான செலவு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் நாசா, இஸ்ரோவை போல் அல்லாமல் தனது செயற்கைகோள் உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதோடு, அதன் பணிகளுக்கு காப்பீட்டையும் எடுத்துக் கொள்வதால் செலவு அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா சாதனைகளை தொடர்ந்து விண்வெளி வீரர்களுடன் விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்வதோடு, அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரக்கூடிய அசாதாரணமான சாதனையையும் ககன்யான் திட்டத்தி செயல்படுத்த இந்தியா முயற்சி செய்து வருகிறது.
நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய பின்னர் பூமிக்கு திரும்புவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமியில் பகுப்பாய்வு செய்யும் சந்திரயான் -4 திட்டத்திற்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்திருப்பதன் மூலம் இஸ்ரோவின் செலவும் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் கடந்த கால விண்வெளித் திட்டங்களைப் போலவே எதிர்கால திட்டங்களும் திட்டமிட்டபடி வெற்றியடையும் பட்சத்தில் விண்வெளி உலகில் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா திகழும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.