விண்வெளியில் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் எலான் மஸ்க் உதவிக்கரம்!
போயிங் ஸ்டார்லைனர்-இல் ஏற்பட்ட ஹீலியம் கசிவு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரைக் காப்பாற்ற எலான் மஸ்கின் SpaceX நிறுவனம் முன் வந்திருக்கிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
2019 மற்றும் 2022ம் ஆண்டில் எடுக்கப்பட்ட இரண்டு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் கடந்த மாதம் வெற்றிகரமாக ஸ்டார் லைனர் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
‘அட்லஸ் 5’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்ஸும், வில்மோரும் பயணித்தனர்.
சுமார் ஒரு வார காலம் விண்ணில் தங்கியிருந்து இந்த விண்கலனின் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள் என நாசா அறிவித்திருந்தது.
கடந்த ஜூன் 3ம் தேதி, பூமிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ்ஸும், வில்மோரும் தொடர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார் லைனரில் ஏற்படும் ஹீலியம் கசிவை சரி செய்யும் பணிகள் இன்னும் தாமதமாகிறது என்று தெரிய வருகிறது.
விண்கலம் ஏவப்படுவதற்கு முன்பே ஹீலியம் கசிவு ஏற்பட்டது என தெரிந்த போதும், அது, பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அளவிற்கு முக்கியமானது அல்ல என்று கருதியதால், சுற்றுப்பாதையை அடைந்த பிறகு கூடுதலாக நிறைய கசிவுகள் உருவாகிவிட்டது. இப்போது விண்வெளிவீரர்கள் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ஸ்டார் லைனரில் சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்களைக் காப்பாற்ற தயார் நிலையில் இருப்பதாக ஸ்பைஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
போயிங் நிறுவனத்தின் முன்னாள் விண்வெளி ஆலோசகரான மைக்கேல் லெம்பெக் கூறும் போது, SpaceX இன் க்ரூ டிராகன் என்னும் விண்கலம் மீட்புப்பணிக்குத் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சுமார் பத்து ஆண்டு கால தீவிர உழைப்புக்கு பிறகு, போயிங் நிறுவனம் , அமெரிக்காவின் நாசாவுக்காக, ஸ்டார்லைனர் விண்கலனை உருவாக்கி இருந்தது. விண்வெளிக்குச் செல்ல விண்வெளி வீரர்களே வடிவமைத்த விண்கலன் இது என்று கூறப் படுகிறது.
இப்போது போயிங் நிறுவனத்துக்கு போதாத காலம் போலிருக்கிறது. கடந்த ஆண்டில் போயிங் விமானங்களின் தரம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. போயிங் நிறுவனத்தின் 20 முன்னாள் ஊழியர்களே போயிங் விமானத்தின் பாதுகாப்பு மற்றும் தரம் பற்றிய உண்மைகளை வெளியிட்டிருந்தனர்.
ஏற்கெனவே, 346 பயணிகள் பலியான இரண்டு 737 மேக்ஸ் விமான விபத்துகள் தொடர்பான கிரிமினல் வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கான தீர்ப்பு வரும் ஜூலை 7அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2020 ஆம் ஆண்டு முதல், விண்வெளி வீரர்கள் பயணம் மற்றும் ISS க்கு சரக்கு போக்குவரத்துக்காக நாசாவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே விண்வெளி வணிக நிறுவனம் SpaceX ஆகும். இப்போது எலான் மஸ்க்கு இன்னொரு ஜாக் பாட் அடித்திருக்கிறது.
அதாவது ,430,000 கிலோ எடையுள்ள சர்வதேச விண்வெளி நிலையமான ISSஸை பூமிக்கு கொண்டுவர உதவும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கைப்பற்றியுள்ளார்.