விண்வெளியில் வலம் வந்த ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விடுவிக்கும் செயல்முறை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு
விண்வெளியில் வலம் வந்த ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விடுவிக்கும் செயல்முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
Advertisement
விண்ணில் பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் என்னும் ஆய்வு நிலையத்தை வரும் 2035-க்குள் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலன்கள் வரும் 2028-ம் ஆண்டு முதல் விண்ணில் தொடர்ந்து செலுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட உள்ளன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின் கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைத்தல், விடுவித்தல் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.
அதற்காக 220 கிலோ எடைகொண்ட ஸ்பேடெக்ஸ் - ஏ, ஸ்பேடெக்ஸ் - பி ஆகிய இரட்டை விண்கலன்கள், பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30-ம் தேதி ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இதனை ஒருங்கிணைக்கும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்று இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.