செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விண்வெளியில் வியத்தகு சாதனை : சிகரம் தொட்ட சிங்கப்பெண்!

07:35 PM Mar 19, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பூமியில் இருந்து சுமார் 460 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமியைத் தொடுகிறார். விண்வெளித்துறையில் வியத்தகு சாதனைகளைப் புரிந்துள்ள சுனிதா வில்லியம்ஸ் குறித்த சிறப்புத் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

Advertisement

"விண்வெளியில் இருந்து பூமியைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்ற நான் பெரும் அதிர்ஷ்டசாலி...” இப்போது உலகம் உச்சரித்துக் கொண்டிருக்கும் பெயரான சுனிதா வில்லியம்ஸ் சொன்ன வார்த்தைகள் இவை.

விண்வெளியில் சாதித்துள்ள சுனிதா வில்லியம்ஸ் முதலில் விரும்பிய துறை இதுவல்ல என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும். சுனிதா பிறந்து, வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் என்றாலும், அவரது தந்தை ஒர் இந்தியர். குஜராத் மாநிலத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜுலாசன்-தான் சுனிதாவின் தந்தை தீபக் பாண்டியாவின் ஊர்.

Advertisement

அகமதாபாத்தில் மருத்துவக்கல்வியை முடித்த தீபக் பாண்டியா, பணி நிமித்தமாக 1958ம் ஆண்டு அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு, ஸ்லோவேனியாவைச் சேர்ந்த உர்சுலின் போன்னி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஜெய், தினா, சுனிதா என மூன்று குழந்தைகள். குறிப்பாக கடைக்குட்டி சிங்கமான சுனிதா அமெரிக்காவின் ஓஹாயோ மாகாணத்தில் 1965-ஆம் ஆண்டு பிறந்தார்.

அதிக நாட்கள் விண்வெளியில் மிதந்த சாதனைக்குச் சொந்தக்காரனான சுனிதாவிற்கு, நீச்சலில் ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆறு வயதிலிருந்தே, நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். இதனால், அவர் நீச்சல் வீராங்கனையாக வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். நீச்சல் மட்டுமின்றி விலங்குகள் மீதும் இருந்த ப்ரியத்தால், விலங்குகள் நல மருத்துவராக விரும்பினார் சுனிதா. ஆனால், இரண்டும் இல்லாமல் மூன்றாவது ஒன்றை நோக்கி காலம் அவரை நகர்த்தியது.

கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தும், விரும்பிய கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து சகோதரர் ஜெய்யின் ஆலோசனையில், அமெரிக்க கடற்படை அகாடமியில் 1983 ஆம் ஆண்டு சேர்ந்தார். அங்கு பயிற்சி முடித்து, 1989ம் ஆண்டு கடற்படையின் பயிற்சி விமானியானார். கடற்படைப் பணியின் போது 30 வகையான வானூர்திகளை இயக்கிய அவர், 2 ஆயிரத்து 770 மணி நேரம் வானில் பறந்துள்ளார்.

தொடர்ந்து 1993 ஆம் ஆண்டில், மேரிலாந்தில் உள்ள கடற்படை டெஸ்ட் பைலட் பள்ளியில் பயின்றவர், ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு சென்றார். பின்னர் நிலவிற்கு சென்ற விண்வெளி வீரர் ஜான் யங்குடன் சேர்ந்து அங்கு பணியாற்றினார். அப்போது விண்வெளித்துறை குறித்த ஆர்வம் ஏற்பட்டு, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் சேர விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

கால்நடை மருத்துவம் படிப்பு போல் இந்த முறை சுனிதா பின்வாங்கவில்லை. புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சேர்ந்து, பொறியியல் மேலாண்மையில் முதுநிலைப் பட்டத்தை 1995ம் ஆண்டு பெற்றார். இதையடுத்து 1997ம் ஆண்டில், மீண்டும் நாசாவுக்கு விண்ணப்பித்தார்.

இந்த முறை நாசாவின் கதவு அவருக்கு திறந்தது. சுனிதாவின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1998-ம் ஆண்டு பயிற்சி விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாசாவில் பெற்ற தொடர் பயிற்சியினால், 2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி முதன்முறையாக டிஸ்கவரி விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு பயணப்பட்டார். சர்வதேச விண்வெளி மைத்திற்கான 14-வது குழுவுடன் பணிகளைத் தொடங்கியவர், பணிகளை முடித்துக் கொண்டு 2007ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி, 15வது குழுவுடன் விண்கலத்தில் பூமிக்கு திரும்பினார்.

2012ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி இரண்டாவது விண்வெளிப் பயணத்தை ரஷ்யாவின் சோயுஸ் டி.எம்.ஏ-05 எம் விண்கலத்தின் மூலம் மேற்கொண்டார் சுனிதா வில்லியம்ஸ். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அதே ஆண்டில் நவம்பர் 19ம் தேதி பூமிக்கு திரும்பினார். கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சக வீரரான புட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் சென்றார்.

ஸ்டார் லைனர் விண்கலத்தின் த்ரஸ்டர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விண்கலம் மட்டும் பூமிக்கு திரும்பியது. இதனால் வெறும் எட்டு நாட்கள் மட்டுமே திட்டமிடப்பட்ட பயணம், 9 மாதங்களாகியது. தொழில்நுட்ப கோளாறு...பூமிக்கு திரும்புவதில் தாமதம், திரும்பும் முயற்சியில் தடை என பிறருக்கு திக்.. திக் நிமிடங்களாக இருந்தாலும். கூலாக தனது பணியைத் தொடர்ந்த சுனிதா, விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்தார்.

விண்வெளித்துறையில் சுனிதாவிற்கு இது முதல் சாதனை அல்ல. ஒவ்வொரு பயணம் ஒரு மைல் கல்லாகத்தான் இருந்திருக்கின்றன. கடந்த 2006-07 ஆண்டு தனது முதல் விண்வெளி பயணத்தின் போதே முதல் சாதனையை பதிவு செய்தார். அப்போது அவர், 29 மணி நேரம் 17 நிமிடங்கள் விண்வெளியில் நடந்ததே, அதுவே இதுவரை ஒரு பெண் பதிவு செய்த மிக நீண்ட விண்வெளி நடையாக உள்ளது.

தற்போது தனது மூன்றாவது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். மூன்று பயணத்திலும் 9 முறை என மொத்தம் 62 மணி நேரம் 6 நிமிடங்களை விண்வெளியில் நடந்துள்ளார். சுனிதா தனது தனிப்பட்ட விபரங்களை பகிர ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார்கள் நெருங்கியவர்கள். அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய போது, மைக்கேல் வில்லியம்ஸ் என்பவரை சந்தித்தார். நண்பர்கள், காதலர்களாகி, தம்பதியாகினர். இருவரும் 1987ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இதற்கு முன்பு சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குச் செல்லும் போது சமோசா மற்றும் பகவத் கீதையையும் கொண்டு சென்றார். தந்தை கொடுத்த இவை என மனதிற்கு மிகவும் நெருக்கமானவை மட்டுமல்ல. நான் எல்லோரையும் போலவே விண்வெளியிலும் இருக்கிறேன் என்பதை எடுத்துக்காட்டவே எடுத்துச் சென்றேன் என்று தெரிவித்தார் சுனிதா வில்லியம்ஸ். இது அவரது எளிமையை எடுத்துக் காட்டினாலும், அவர் செய்துள்ள சாதனைகள் எதுவும் எளிதானதல்ல என்கிறது விண்வெளித்துறை.

Advertisement
Tags :
விண்வெளிFEATUREDMAINNASAAstronaut Sunita Williamsசுனிதா வில்லியம்ஸ்Amazing achievement in space: Lioness reaches the summit!
Advertisement