For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

விண்வெளி வீரர்கள் ஊதியம் : சுனிதா வில்லியம்ஸிற்கு எவ்வளவு கோடி கிடைக்கும்? - சிறப்பு கட்டுரை!

08:00 AM Dec 22, 2024 IST | Murugesan M
விண்வெளி வீரர்கள் ஊதியம்   சுனிதா வில்லியம்ஸிற்கு எவ்வளவு கோடி கிடைக்கும்    சிறப்பு கட்டுரை

விண்வெளித்துறை வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக உள்ளது. பொதுவாக சுனிதா வில்லியம்ஸ் போன்ற விண்வெளி வீரர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் ? என்ன மாதிரியான கல்வித் தகுதி இருந்தால் விண்வெளி வீரர் என்ற வேலையில் சேர முடியும் ? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக அமெரிக்காவின் நாசா விளங்குகிறது. அதற்கு அடுத்த படியாக, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) உள்ளது. மூன்றாவது இடத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உள்ளது. இது தவிர இந்தியா, ரஷ்யா,சீனா,ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டின் விண்வெளித் துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

Advertisement

தொடர்ந்து விண்வெளி ஆய்வுகளை நடத்தி வருவதால், பல விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப் படுகிறார்கள். இந்த கடினமான மற்றும்,பெரும் பொறுப்புடைய வேலை பார்க்கும் விண்வெளி வீரர்களுக்கு, நிலையான ஒரு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, விண்வெளி வீரர்களின் அனுபவம், பொறுப்பு,மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்து சம்பளம் தரப் படுகிறது.

அமெரிக்க அரசின் பொது அட்டவணை ஊதிய விகிதங்களின் படி, ஆண்டுக்கு 70,79,910 ரூபாய் முதல் 96,57,429 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நாசா விண்வெளி வீரர்களின் சம்பளம் ஆண்டுக்கு 1,27,75,968.78 ரூபாய் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், ராணுவ விண்வெளி வீரர்கள், நாசாவின் பல்வேறு பணிகளில் பொதுவாக அதிகாரிகளாக நியமிக்கப் படுகிறார்கள்.

Advertisement

நாசாவில் உள்ள ராணுவ விண்வெளி வீரர்கள் பல ஆண்டுகள் சேவை மற்றும் பறக்கும் அனுபவம் போன்ற குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ராணுவப் பின்னணியைக் கொண்ட நாசா விண்வெளி வீரர்களுக்கான சம்பளம், விண்வெளி வீரர்களின் அனுபவம் மற்றும் பதவியைப் பொறுத்து மாறுபடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவத்துடன் இணைந்த விண்வெளி வீரர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு குறிப்பிட்ட விண்வெளி பணியில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, சுகாதார பாதுகாப்பு என பல்வேறு சலுகைகளும் விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படுகின்றன. வரும் ஆண்டில் இந்த சம்பளம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2020ம் ஆண்டு முதல் விண்வெளி வீரராக பணியாற்றி வரும் அமெரிக்க கடற்படைத் தளபதி மேத்யூ டொமினிக், மாதத்துக்கு சுமார் 6,87,452 ரூபாய் சம்பாதிப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு பதவி உயர்வு பெற்ற அமெரிக்க விமானப்படையின் பிரிகேடியர் ஜெனரல் ராஜா சாரி, உடல்நலம், காப்பீடு மற்றும் ஓய்வூதியம் போன்றசலுகைகள் இல்லாமல், மாதந்தோறும் சுமார் 8,92,033 ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என கூறப்பட்டுள்ளது.

பொதுவாக, விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் விண்வெளி வீரர்களுக்குப் போனஸ் வழங்கப் படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. விண்வெளி பயணம் செல்லும் வீரர்களுக்கு என்ன சம்பளம் என்று பார்த்தோம். விண்வெளி வீரராக என்ன அடிப்படை தகுதிகள் வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

முதலில், அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தகுதிப் பாடங்களில் பொறியியல், உயிரியல், இயற்பியல், கணினி அல்லது கணிதம் பாடங்களைக் கண்டிப்பாக படித்திருக்க வேண்டும்.

பட்டப்படிப்பு முடிந்த பிறகு, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தொழில்முறை அனுபவம் அல்லது 1,000 மணிநேரம் ஜெட் விமானத்தில் வானில் பைலட்-இன்-கமாண்டாக பறந்த அனுபவம் இருக்க வேண்டும்.

மேலும், நீண்ட கால விண்வெளி பயணத்துக்குத் தேவையான நாசாவின் கடுமையான உடல் தகுதி சோதனைகளை முடித்திருக்க வேண்டும். கூடுதலாக SOFT SKILLS வகையிலும் திறன் பெற்றிருக்க வேண்டும். இதற்குப் பின், நாசாவின் விண்வெளி வீரர் தேர்வு வாரியம், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் தகுதிகளையும் அனுபவத்தையும் கவனமாக மதிப்பீடு செய்கிறது.

முதல் சுற்று நேர்காணலில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை இரண்டாம் சுற்று நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதிலும், வெற்றி பெற்றவர்களை இறுதி தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்கள், விண்வெளி பயணத்துக்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக இரண்டு ஆண்டுகள் தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

இந்தப் பயிற்சிக்குப் பின் விண்வெளி வீரர்கள் தங்கள் விண்வெளி பயணத்தைத் தொடங்குவதற்கு முழுமையாகத் தயாராகிவிடுவார்கள். என்ன தான் சம்பளம் என்றாலும், வாழ்வா, சாவா பயணமே விண்வெளி பயணம் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement
Tags :
Advertisement