விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு விதிகள் திருத்தம்!
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் விமான பாதுகாப்பு விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கு வரும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்களை தடுக்க, சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர விமான போக்குவரத்து அமைச்சகம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக விமான போக்குவரத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, துறை சார்ந்த அதிகாரிகளுடன் பலமுறை ஆலோசனை நடத்தினார்.
அதன் அடிப்படையில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில், விமான பாதுகாப்பு விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
இது தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் தனி நபருக்கு ஒரு லட்சம் ரூபாயும், சிறிய அமைப்புக்கு 50 லட்சம் ரூபாயும், நடுத்தர அமைப்புக்கு 75 லட்சம் ரூபாயும், பெரிய அமைப்புக்கு ஒரு கோடி ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்மந்தப்பட்ட தனி நபர் அல்லது சம்மந்தப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களை விமானங்களில் பயணம் மேற்கொள்வதற்கான தடை பட்டியலில் சேர்க்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.