விரைவில் பிரதமரிடம் அறிக்கையை சமர்பிப்போம்! : தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி
குற்றப்பின்னணி உடைய நபரால் அண்ணா பல்கலைக்கழகத்தினுள் சாதாரணமாக சென்று வர முடிந்தது எப்படி என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, இன்று டெல்லி புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவரை அரசு எப்படி இத்தனை இயல்பாக நடமாட அனுமதித்தது எனவும், அவரால் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் எப்படி சாதாரணமாக சென்றுவர முடிந்தது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து விசாரணை நடத்தியதாக தெரிவித்த அவர், டெல்லியில் இருந்து வந்த 4 பேர் கொண்ட குழு, சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆய்வறிக்கை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், வெகு விரைவில் விசாரணை நடத்தி தயார் செய்யப்பட்ட முழு அறிக்கையை பிரதமரிடம் சமர்பிக்க உள்ளதாகவும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தெரிவித்தார்.