விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1 % கூட, மாணவர்கள் நலனுக்காக திமுக அரசு செலவிடவில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!
பட்டியல் சமூக மாணவர்களை திமுக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது ஏன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தரமற்ற உணவை மாணவர்கள் உண்ணாததால் விடுதி ஊழியர்கள் உணவை அருகிலுள்ள கால்நடைப் பண்ணைகளுக்கு விற்பனை செய்து விடுவதாகப் புகார் எழுந்துள்ளதாகக் கூறியுள்ள அண்ணாமலை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1 சதவீதத்தைக் கூட, மாணவர்கள் நலனுக்காக திமுக அரசு செலவிடவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியைச் செலவிடாமல், ஆண்டுதோறும் திமுக அரசு திருப்பி அனுப்புவதாகத் தெரிவித்துள்ள அண்ணாமலை, பட்டியல் சமூக மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் திமுக அரசு நடத்துவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் மாணவர் விடுதிகளை மேம்படுத்தி, சுத்தமான குடிநீர், சுகாதாரமான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.