விவசாயிகளுக்கு மானிய விலையில் டை அமோனியம் பாஸ்பேட் உர மூட்டை - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!
பயிர்க் காப்பீடு திட்டத்தின்கீழ், மானிய விலையில் விவசாயிகளுக்கு 50 கிலோ டைஅமோனியம் பாஸ்பேட் உர மூட்டை 1,350 ரூபாய்க்கு தடையின்றி வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக மத்திய அமைச்சரவை கூடி விவாதித்தது.
அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் விவரித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விவசாயிகளுக்குதடையின்றி மானிய விலையில் 1,350 ரூபாய்க்கு 50 கிலோ டைஅமோனியம் பாஸ்பேட் உர மூட்டை வழங்கப்படும் எனக் கூறினார்.
இதே உர மூட்டை பிற நாடுகளில் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறிய அவர், இந்தத் திட்டத்துக்காக 3 ஆயிரத்து 850 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதேபோல பயிர்க்காப்பீடு திட்ட பயன்பாட்டை விவசாயிகள் எளிமையாக பெறும் நோக்கில், புதிய தொழில்நுட்பங்களை புகுத்த 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
பயிர்க் காப்பீடு திட்டத்தைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு மற்றும் இமயமலையை ஒட்டியுள்ள மாநிலங்களில் 10 சதவீத நிதியை மாநில அரசுகளும், 90 சதவீத நிதியை மத்திய அரசும் செலுத்தும் என்று கூறிய அவர்,
பிற மாநிலங்களில் இந்த அளவு 50-க்கு 50 என்ற வீதத்தில் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.