விவசாயிகள் குறித்து முதல்வருக்கு எந்த கவலையும் இல்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு!
விளம்பரம் செய்வதுடன் கடமை முடிந்து விட்டதாக கருதும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் குறித்து எந்தக் கவலையும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
கனமழையால் டெல்டா விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பாசனக் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்ற டெல்டா விவசாயிகளின் கோரிக்கைக்கு திமுக அரசு செவி சாய்ப்பதில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக அரசின் மெத்தனப்போக்கால் டெல்டா பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என விமர்சித்துள்ள அண்ணாமலை, சிலை வைப்பது போன்ற வீண் செலவுகளை மட்டுமே திமுக அரசு மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசு வழங்குவது போல் முதலமைச்சர் ஸ்டாலின் விளம்பரம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ள அவர்,
விளம்பரம் செய்வதுடன் கடமை முடிந்து விட்டதாக கருதும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் குறித்து எந்தக் கவலையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், பாசன கால்வாய்களை தூர்வார தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள அண்ணாமலை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.