விவாகரத்து கொடுக்க மறுத்த கணவன் - கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழவரம் அருகே கூலிப்படையை ஏவி, கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார் ஓட்டுநர் ராமகிருஷ்ணனின் மனைவி சிவகாமி, தனக்கு விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு, அவரது கணவர் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 28 -ஆம் தேதி சிவகாமி செல்போனில் அழைத்தன் பேரில், அவரது கணவர் ராமகிருஷ்ணன் சோழவரம் சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த 3 பேர் ராமகிருஷ்ணனை கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில், படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியோடு விசாரணை நடத்திய போலீசார், விவாகரத்து கொடுக்க மறுத்ததால் அவரது மனைவியே இச்செயலில் ஈடுபட்டுள்ளார் என கண்டறிந்தனர். மேலும், இது தொடர்பாக, சிவகாமி, சென்னையைச் சேர்ந்த நவீன், கெல்வின் ராஜ் மற்றும் நித்திஷ் ராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.