மர்ம நபர் கத்தியால் குத்தியது ஏன் ? - நடிகர் சைஃப் அலிகான் வாக்குமூலம்!
தனது வீட்டு பணிப்பெண்ணை மிரட்டிக்கொண்டிருந்த மர்மநபரை பிடிக்க முயன்றபோது கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்ததாக நடிகர் சைஃப் அலிகான் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த வாரம் நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த சைஃப் அலி கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 21ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் சைஃப் அலி கான் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், சம்பவம் நடந்தபோது தானும் தனது மனைவியும் தங்கள் அறையில் இருந்ததாகவும், அப்போது பணிப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். உடனடியாக சென்று பார்த்தபோது, பணிப்பெண்ணை மர்மநபர் மிரட்டிக்கொண்டிருந்ததாக தெரிவித்த அவர், மர்மநபரை பிடிக்க முயன்றபோது கத்தியால் குத்தப்பட்டதாக கூறினார். தாக்குதலில் படுகாயமடைந்ததால் தமது பிடியில் இருந்து மர்மநபர் தப்பிவிட்டதாகவும் சைஃப் அலி வாக்குமூலம் அளித்துள்ளார்.