வீரத் தியாகத்தின் அடையாளம் மருது சகோதரர்கள் - சிறப்பு கட்டுரை!
இந்தியாவின் முதல் சுதந்திர பிரகடனமான ஜம்பு தீவு பிரகடனத்தை வெளியிட்ட மருது சகோதரர்கள், தேசப் பற்றுடனும், வீரத்துடனும் நாட்டுக்காக வாழ்ந்து உயிரை விட்டனர். வீர தியாகத்தின் அடையாளமாக திகழும் அவர்களை பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.
இன்றைக்கு சரியாக 223 ஆண்டுகளுக்கு முன் அக்டோபர் 27ம் தேதி நடுத்தர வயதுள்ள இரண்டு சகோதரர்கள் ஆங்கிலேயர்களால், திருப்பத்தூர் கோட்டையில் வைத்து தூக்கிலிடப்பட்டனர். நாட்டுக்காக, இன்னுயிர் நீத்த வீரம் மிக்க இளைஞர்களே மருது சகோதரர்கள்.
இந்தியாவின் முதல் சுதந்திர போர் என்று கூறப்படும் சிப்பாய் கலகம் 1857ஆம் ஆண்டில் நடந்தது. அதற்கு 56 ஆண்டுகளுக்கு முன்பே மருது சகோதரர்கள் சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.
குறிப்பாக, 1801 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் தேதி திருச்சி கோட்டையில், நின்றுகொண்டு, ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக்கு எதிராக இந்தியாவிலேயே முதன்முறையாக ஜம்பு தீவு பிரகடனம் என்ற சுதந்திரப் பிரகடனத்தை மருது சகோதரர்கள் வெளியிட்டனர்.
வியாபாரம் செய்ய வந்து பாரதத்தை அடிமைப்படுத்திய, ஆங்கிலேயர்களை எதிர்த்து, பல போர் களங்களைக் கண்டவர்கள் மருது சகோதர்கள்.
பீரங்கி, துப்பாக்கி என ராணுவ தளவாடங்கள் வைத்திருந்த ஆங்கிலேய ராணுவத்தை, வெறும் வேல் கம்பு, வீச்சரிவாள், வளரி, போன்ற ஆயுதங்களால் மருது சகோதரர்கள் ஓட ஓட வைத்தனர்.
மனலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கை போர், மங்களம் போர், மானாமதுரை போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனூர் போர்,காரான்மலை போர் என்று மருது சகோதர்களின் போர் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
1748ம் ஆண்டில் டிசம்பர் 15ஆம் தேதி, சிவகங்கை சீமையின் இரண்டாவது மன்னரான முத்துவடுக நாதருக்குப் பணிபுரிந்த மூக்கையா பழனியப்பனுக்கும், ஆனந்தாயி என்ற பொன்னாத்தாளுக்கும் மகனாக இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள நரிக்குடியில் பெரிய மருது பிறந்தார். பெரிய மருது பிறந்து 5 ஆண்டுகள் கழித்து 1753 ஆம் ஆண்டில் சின்ன மருது பிறந்தார்.
சிவகங்கையில் விஜயரகுநாத சேதுபதி அரசராக இருந்தபோது, தகுதிவாய்ந்த வீர இளவல்களை தேடியபோது, மருது சகோதரர்களை அரசு பணிக்காக பெற்றோர் அனுப்பி வைத்தனர். பிறகு, 1761 ஆம் ஆண்டில் முத்து வடுகநாதரும், வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களை சிவகங்கை அழைத்து வந்தனர்.
அந்நேரத்தில், தஞ்சை மன்னன், ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான். இதனையடுத்து ஆங்கிலேய படைக்கு, புதுக்கோட்டை தொண்டைமான் படை உதவி செய்து நிலையில்ல, ராமநாதபுரத்தை முற்றுகையிட்ட ஆற்காடு நவாப், சிவகங்கை சீமையை கைப்பற்ற சூழ்ச்சி செய்கிறான்.
இந்த திடீர் போர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியாகிறார். பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.
1772ம் ஆண்டு முதல் 1780 வரை தலைமறைவு வாழ்க்கை நடத்திவந்த மருது சகோதரர்கள், ஆங்கிலேயர் மற்றும் நவாபுக்கு எதிராக படை திரட்டுகிறார்கள்.
1779ம் ஆண்டு தொடங்கி ஆற்காடு நவாப், தொண்டைமான் மற்றும் ஆங்கிலேயர்களின் படைகளை மருது சகோதரர்கள் வெற்றி கொண்டனர். 1780ம் ஆண்டில் சிவகங்கை சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். மருது சகோதரர்களை அரசு பிரதிநிதிகளாக வேலுநாச்சியார் நியமிக்கிறார்.
1796 ஆம் ஆண்டு, வேலுநாச்சியார் மறைவுக்குப் பின், பெரியமருது சிவகங்கைச் சீமையின் மன்னராகவும், சின்னமருது அமைச்சராகவும் தளபதியாகவும் நாட்டை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தனர்.
போர் தந்திரம் மிக்க பெரிய மருதுவும், அரசியல் தந்திரம் மிக்க சின்ன மருதுவும், தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்டனர்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801ஆம் ஆண்டு, மே 28ம் தேதி, சிவகங்கை சீமை மீது ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். 150 நாட்கள் தொடர்ந்து நடந்த தீவிரமான போர் , மருது சகோதர்களை தூக்கிலிடப்பட்ட பின் தான் ஓய்ந்தது.
சிறைப்பிடிக்கப்பட்ட மருது சகோதரர்களின் குடும்பத்தினர் அனைவரும், எந்த விசாரணையும் இன்றி உடனடியாக தூக்கிலிடப்பட்டனர். சொல்லப் போனால், ஒரு வம்சத்தையே ஆங்கிலேய அரசு தூக்கிலிட்டு கொன்றது.
மேலும், சின்ன மருதுவின் மூன்றாவது மகன் 15 வயதான துரைசாமி மட்டும் தேசத்துரோக கைதியாக பினாங்கு நாட்டில் உள்ள சுமத்திரா தீவுக்கு நாடு கடத்தப் படுகிறான். அவனோடு மேலும் 72 வீரர்கள் தேசத்துரோக கைதிகளாக நாடு கடத்தப்படுகின்றனர்.
நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் தியாகம் வேறு எவரும் செய்யாத தியாகமாகும்.
ஆண்டு தோறும் மருது பாண்டியர் நினைவு தினம், தமிழ்நாடு அரசு விழாவாக திருப்பத்தூரிலும், சமுதாய விழாவாக காளையார் கோவிலிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.