வீரபாண்டிய கட்டபொம்மன் வீரத்தை போற்றுவோம் - எல்.முருகன் புகழாரம்!
வீரபாண்டிய கட்டபொம்மன் வீரத்தைப் போற்றுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
Advertisement
அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "இந்திய விடுதலைப் போராட்ட தியாகியும், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட துணிச்சல்மிக்க பாளையக்காரருமான வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்ததினம் இன்று.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிலிருந்து ஆட்சி செய்த வீரபாண்டிய கட்டபொம்மன் , நெல்லைச் சீமையில் ஆங்கிலேய அதிகாரிகளின் வரி வசூலிக்கும் முறைக்கு எதிராக இயங்கினார்.
தன்னை எதிர்த்துப் போரிட வந்த ஆங்கிலேய தளபதி ஆலன் துரையின் பெரும்படையை தோற்கடித்து வீரத்தை நிலைநாட்டினார். இந்திய விடுதலைப் போரின் ஆரம்பக் கால கொடுமைகளுக்கு எதிராக மிகப் பெரும் துணிச்சலுடன் போர் புரிந்து, தமிழ் மண்ணிற்கு தன்னை தியாகமாய் அளித்த வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தில், அவரது வீரத்தைப் போற்றுவோம்" என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அவர் விடுத்துள்ள மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளதாவது :
இந்தியாவில் ஆட்சி கொண்டிருந்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை, #வீரமங்கை_வேலுநாச்சியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி தீரமுடன் போரிட்டவர், தனது திறன் மிகுந்த படை பலத்துடன் அன்னியர்களை வெற்றி கொண்டு, சிவகங்கைச் சீமையை செம்மையுடன் ஆண்டு வந்தார். எக்காலமும் நமது சந்ததியினர் போற்றிப் புகழும்படி வீரம் செறிந்த வரலாறாய் வாழ்ந்த, இராணி வேலுநாச்சியார் அவர்களின் வீரத்தை போற்றி வணங்குவோம் என எல்.முருகன் கூறியுள்ளார்.