வீழ்ந்த சர்வாதிகாரம் : சிரியாவை கைப்பற்றிய பயங்கரவாதிகள் - சிறப்பு கட்டுரை!
சிரியா தலைநகர் டமாஸ்கஸ்ஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அதிபர் பஷார் அல் ஆசாத் நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார். அவர் எங்கே சென்றார் எனத்தெரியவில்லை. 54 ஆண்டுகால சர்வாதிகாரமும், 13 ஆண்டுகால உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது எப்படி என விரிவாகப் பார்க்கலாம்.
Advertisement
2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி... துருக்கி கடற்கரையில் ஒரு சிறுவனின் உடல் தலைகுப்புறக் கிடந்தது. அவனது பிஞ்சு முகத்தை அலையும் நுரையும் வருடிக்கொண்டிருந்த புகைப்படம் உலகையே உலுக்கியது. எப்படியாவது உள்நாட்டுப் போரில் இருந்து தப்பி உயிர்வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் சிரியாவில் இருந்து தப்பியோடிய அகதிகளின் நிலையை வெளிச்சம் போட்டு காட்டியது அந்தப்படம்.
கடத்தல்காரர்களின் மோசமான படகில் தப்பியோடிய ஒரு குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமான அந்தச் சிறுவனின் பெயர் ஆலன். அவன் மறைந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு சிரிய அகதிகளுக்காக சில நாடுகள் தங்கள் எல்லையைத் திறந்தன. அதற்கு அந்தச் சின்னஞ்சிறு உயிர் தேவைப்பட்டது.
சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரால் பறிபோனது ஆலனின் உயிர் மட்டுமா? லட்சக்கணக்கானவர்கள் மாண்டுபோனார்கள். சொந்த மக்கள் மேலேயே... அதிலும் குழந்தைகள் மீது சரின் எனப்படும் ரசாயனத்தைக் கொண்டு அரசாங்கம் தாக்குதல் நடத்தினால், அப்பாவிகள் அழிந்துதானே போவார்கள்?
அப்படி ஓர் படுபாதகத்தைச் செய்தவர்தான் பஷார் அல் ஆசாத். ஒரு துளி சரின் நிமிடங்களில் ஒருவரைக் கொன்றுவிடும். அதை சுவாசித்ததும் கருவிழிகள் இறுகத் தொடங்கும். வாயில் நுரை தள்ளும். கை,கால்களில் வலிப்பு ஏற்படும். மொத்த நரம்பு மண்டலமும் செயலிழக்கும். தோல் உருகி ரத்தம் சொட்டும்.
"என் நாடு என்னைப் போலவே மிகச் சிறியது
எங்கள் நிலம் எரிந்து கொண்டிருக்கிறது
வெடிகுண்டு சத்தத்தால் எங்கள் புறாக்கள் பறப்பதில்லை
எங்கள் வானம் கனவு கண்டுகொண்டிருக்கிறது, அந்த நாட்களைக் கேட்டு...
எங்களது குழந்தைப் பருவத்தை திருப்பித் தாருங்கள்" என்ற பாடலை சவுதியின் வாய்ஸ் நிகழ்ச்சியில் பாடிய க்யூனா என்ற சிரிய சிறுமியை சர்வதேச அரசியலைக் கவனிக்கும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
கடந்த 13 ஆண்டுகளாக சிரிய மக்கள் அனுபவித்த கொடுமைகளின் வெளிப்பாடே இந்தப்பாடல்.
மத்திய தரைக் கடலின் கிழக்கு ஓரமாக அமைந்துள்ள நாடு சிரியா. 30 ஆண்டுகள் அந்த மண்ணை ஆண்ட HAFEZ AL ASSAD எதிர்க்கட்சிகளுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது என்று 1990-ஆம் ஆண்டு வெளிப்படையாக அறிவித்தார்.
சில சமயம் சட்டவிரோதமாகச் செயல்பட்டாலும் ஓரளவுக்கு மக்களின் ஆதரவு பெற்ற அதிபராகவே இருந்தார் ஹஃபீஸ். சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு முன்பே வேலையின்மை, ஊழல், மற்றும் அதிகாரத்துக்கு எதிராக மக்கள் போராட ஆரம்பித்துவிட்டனர். அப்படி ஓர் சூழலில்தான் இரண்டாயிரமாம் ஆண்டு ஹஃபீஸ் மறைந்த பிறகு, அவரது மகன் பஷார் அல் ஆசாத் சிரிய அதிபராக பதவியேற்றார்.
2011-ஆம் ஆண்டு தரா என்ற இடத்தில் ஆசாத்துக்கு எதிரான வாசகங்களை பள்ளிச் சுவரில் எழுதிய சிறுவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். அதனால் ஏற்பட்ட கோபத்தீ கிளர்ச்சியாக மாறியது.
பஷாருக்கு எதிராக ஐ.எஸ். இயக்கமும், குர்திஷ் இனத்தவரும் போரை அறிவித்தனர். சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிரியாவில் ஷியா முஸ்லிமான பஷார் அல் ஆசாத் ஆட்சி செய்வதை எதிர்த்தரப்பு விரும்பவில்லை என்பதும் உள்நாட்டுப் போருக்கு முக்கியக் காரணமானது.
சிரியாவில் மிகப்பெரிய அளவில் காலூன்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ஆளும் ஆசாத் அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. 2019-ஆம் ஆண்டு அதன் தலைவர் கொல்லப்பட்ட பிறகு அந்த அமைப்பின் வலிமை குறைந்தது.
இந்நிலையில் அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த அபு முகமது அல் ஜவ்லானி 2017-ஆம் ஆண்டு HTS எனப்படும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற அமைப்பின் தலைவரானார். சிரியாவின் அடிப்படைவாத இஸ்லாமிய இயக்கமான HTS, ஒன்றரை வாரத்துக்கு முன்பு தாக்குதலை தீவிரப்படுத்தி சிரிய தலைநகர் டமாஸ்கஸ் உள்பட முக்கிய நகரங்களை கைப்பற்றியிருக்கிறது.
அதனால் அதிபர் பஷார் அல் ஆசாத் நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார். அவரது விமானம் எங்கு சென்றது என்றே தெரியவில்லை. பஷார் அல் ஆசாத்தின் தந்தை HAFEZ AL ASSAD-ன் சிலையை உடைத்த கிளர்ச்சியாளர்கள், அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 'மோசமான ஆட்சியாளர்' அதிபர் பஷார் அல் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் எனக் கூறியுள்ள கிளர்ச்சியாளர்கள், நாடு விடுவிக்கப்பட்டது என்று அறிவித்துள்ளனர்.
ஆசாத்தின் சர்வாதிகாரத்தால் கடந்த 50 ஆண்டுகளாக இடம்பெயர்ந்தவர்கள் தாயகம் திரும்பி புதிய சிரியாவில் நிம்மதியாக வாழலாம் என்றும் ஒரு இருண்ட சகாப்தத்தின் முடிவு மற்றும் புதிய சகாப்தத்தின் ஆரம்பம் இது என்றும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுக்கணக்கில் நடக்கும் உள்நாட்டுப் போரால் ராணுவம் மோசமான பாதிப்புகளைச் சந்தித்ததும், ஆசாத்தின் முக்கிய கூட்டாளிகளான ரஷ்யா, ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தங்களது சொந்த மோதல்களில் கவனம் செலுத்தியதுமே இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சிரியாவில் உள்ள இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ள நிலையில், சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் அமெரிக்கா தலையிடாது என்று அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்றவரும் முன்னாள் அதிபருமான ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் வங்கதேசத்தை தொடர்ந்து சிரியாவிலும் ஆட்சியாளர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளார்கள். ஆட்சி மாற்றம் நடைபெறும் வரை அனைத்து அரசுத் துறைகளும் பிரதமரின் மேற்பார்வையில் இருக்குமென கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இனியாவது சிரிய மக்களுக்கு நிம்மதி கிடைத்தால் நலம்.