வேலுநாச்சியார் நினைவு தினம் - நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார்!
வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 228வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் குருபூஜையை தொடங்கி வைத்தார்.
வெள்ளையர்களால் அபகரிக்கப்பட்டு கிடந்த சிவகங்கை மண்ணை மீட்ட முதல் பெண் போராளியான வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் 228வது நினைவு தினத்தையொட்டி அரண்மனை வாசல் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை அனுசரிக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் சிலைக்கு சிவகங்கை ராணி சாகிபா மதுராந்தகி நாச்சியார் மாலை அணிவித்து முதல் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அரண்மனை வளாகத்திற்குள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து வேலுநாச்சியாரின் சிலைக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் சமுதாய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்காக மாவட்ட காவல்துறை சார்பில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.