வேளச்சேரி : திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!
சென்னை வேளச்சேரியில் 80 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களின் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
வேளச்சேரி பகுதியில் பூங்கா மற்றும் பார்க்கிங் அமைப்பதற்கு ஏதுவாக ஜெகநாதபுரம், ராஜலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களின் வீடுகளை இடிப்பதற்காக கணக்கெடுக்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. குறிப்பாக சுமார் 850 வீடுகளை இடிக்க திட்டமிட்டு கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளச்சேரி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் முயன்ற நிலையில், அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். ஒருபுறம் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் வீடுகளை கணக்கெடுக்கும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே திமுக கட்சி அலுவலகத்தை கணக்கெடுக்காமல் சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து திமுக கட்சி அலுவலகத்தையும் வீடுகளுடன் சேர்த்து கணக்கெடுக்குமாறு கூறியதால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.