வைகை ஆறு மதுரையின் அடையாளமா? குப்பைத்தொட்டியா? - சிறப்பு தொகுப்பு!
மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழும் வைகையாறு, தற்போது அறிவிக்கப்படாத குப்பை தொட்டியாக மாறி வருகிறது. இதுகுறித்த சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள், இறந்து மிதக்கும் விலங்குகள், சகிக்க முடியாத துர்நாற்றம் என முகம் சுழிக்க வைக்கும் இந்த இடம்தான் தமிழர்களின் நாகரீக தொட்டிலான வைகையாறு.
மதுரை மாநகரப் பகுதியில் 12 கிலோமீட்டர் வரை ஓடும் வைகையாற்றை பராமரிக்க வேண்டியது மாநகராட்சி நிர்வாகத்தின் கடமை. ஆனால், அதிகாரிகள் தங்களது கடமையை சரிவர செய்தார்களா இல்லையா என்பதற்கு நாம் தற்போது பார்த்துவரும் காட்சிகளே சாட்சி.
வைகை ஆற்றில் கலக்காத கழிவுகளே இருக்கக்கூடாது என்ற சீரிய நோக்கத்தோடு அனைத்துவகை கழிவுகளையும் தொழிற்சாலைகள் கலந்துவிட்டு வருகின்றன. பொதுமக்களும் தங்கள் பங்குக்கு வைகையை சீரழிப்பதற்கு, தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
ஆழ்வார்புரம் பகுதியில் இருந்து பெயிண்ட் மற்றும் ரசாயன கழிவுகளும், நெல்பேட்டை பகுதிகளில் இருந்து இறைச்சி கழிவுகளும், ஆரப்பாளையம் பகுதிகளில் இருந்து துணிகளை துவைக்கும் ரசாயனங்களும், தெப்பக்குளம் பகுதிகளில் இருந்து பிளாஸ்டிக் குடோன் கழிவுகளும் அண்ணாநகர் பகுதிகளில் இருந்து அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுகளும் வைகையில் கலக்கின்றன. வைகையாற்றில் இதுவரை எந்த கழிவு கலக்கவில்லை என்பதை இனிதான் தேடி பிடிக்க வேண்டும்.
வைகையாற்றின் நீரைக் குடிக்க கால்நடைகள் கூட தயக்கம் காட்டும்.
மதுரையில் இருந்து சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் பகுதிக்கு செல்லும் வைகை நீரை, விவசாயத்திற்கு கூட பயன்படுத்த முடியாது. அந்தளவுக்கு வைகை நீர் மிகவும் மோசமாக உள்ளது.
தேனி மாவட்டம் வாலிப்பாறை முதல் ராமநாதபுரம் மாவட்டம் வரை 177 இடங்களில் 197 குழாய்கள் மூலம் வைகையாற்றுக்குள் நேரடியாக கழிவுகள் கலப்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தேனியில் 18 இடங்கள், திண்டுக்கல்லில் 25 இடங்கள், மதுரையில் 64 இடங்கள், சிவகங்கையில் 29 இடங்கள், ராமநாதபுரத்தில் 64 இடங்களில் இருந்து நேரடியாக கழிவுநீர் வைகையில் கலக்கிறது.
வைகையாற்றில் 36 இடங்களில் இருந்து நீர் மாதிரிகளை சேகரித்து மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை குழுவினர் சோதனை நடத்தினர். அதில், வைகை நீரானது சுத்திகரிப்பு செய்து குடிப்பதற்குகூட தகுதி இல்லாதது என்பது தெரிய வந்துள்ளது. 5 இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட நீர், மிகமிக மோசமான நிலையில் இருப்பதும் அவலத்திலும் அவலம்.
வைகையை காக்க வேண்டும் என மதுரை மாநகராட்சிக்கு திடீரென அக்கறை வரும். “வைகையை காப்போம், மாமதுரையை மீட்போம்” என முழங்கிக்கொண்டு பல்வேறு திட்டங்களை வகுக்கும். ஆனால், அவை எல்லாம் சில நாட்கள்தான். பிறகு பழையபடியே வைகையின் சுகாதாரம் பல்லிளிக்க தொடங்கிவிடும்.
வைகையாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இதுவரை எத்தனை முறை விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதும், குப்பை கொட்டியவர்களிடம் இருந்து எத்தனை ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதும் வைகை ஆற்றில் இறங்கும் அந்த கள்ளழகருக்குதான் வெளிச்சம்.
அக்கறை இல்லாமல் உள்ள அதிகாரிகளாலும், விழிப்புணர்வு இல்லாத பொதுமக்களாலும் தொடர்ந்து சீரழிந்து வருகிறது, பல்லாயிரம் ஆண்டு பெருமை வாய்ந்த வைகையாறு. இந்த ஆற்றை நம்பி 175க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. சுகாதார சீர்கேட்டால் அந்த பறவை இனங்களும் பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இப்படி மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும், மீன்களுக்கும், பறவைகளுக்கும் கூட வைகையன்னை நஞ்சாக மாறி வருகிறாள். வைகையாறு மதுரையின் வரலாற்று அடையாளமாக நீடிக்க வேண்டுமா அல்லது குப்பை தொட்டியாக உருமாற வேண்டுமா என்பதை மாநகராட்சி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்.