ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்கிறது PSLV C-59 ராக்கெட்!
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஐரோப்பாவின் 'ப்ரோபா 3’ செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் இன்று மாலை ஏவப்படுகிறது. இதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் - நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் இடையே அண்மையில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இஎஸ்ஏ நிறுவனத்தின் ‘ப்ரோபா-3’ எனப்படும் இரு செயற்கைக்கோள்கள் இன்று ஏவப்படுகின்றன.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து மாலை 4.08 மணிக்கு 'ப்ரோபா 3’ செயற்கைகோள்களுடன், பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் விண்ணில் பாயவுள்ளது. புவியிலிருந்து 60 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட உள்ளன.
இந்த இரு செயற்கைக்கோள்களும், 150 மீட்டா் தொலைவில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளியைச் சுற்றி ஆய்வு செய்து அதன் தரவுகளை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புமென இஸ்ரோ தெரிவித்துள்ளது.