ஸ்ரீ இராமர் திருக்கோயில்
ஸ்ரீ இராமர் திருக்கோயில்
உலகெங்கும் வாழும் இந்தியர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்த ஸ்ரீ இராமர் ஜென்ம ஷேத்திரமான உத்திர பிரதேசத்தில் இருக்கும் அயோத்தியில் ஸ்ரீ இராமர் திருக்கோவிலின் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன .
ஸ்ரீ இராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலர் சம்பத் ராய் அறிக்கையின் படி கோயிலைக் கட்டுவதற்கான காலக்கெடு டிசம்பர் 2023 என்றும் , பக்தர்களின் ஸ்ரீ இராம தரிசனத்திற்காக திருக்கோயிலைத் திறப்பது ஜனவரி 2024 என்றும் தெரிய வருகிறது.
இதே செய்தியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் வருகிற ஜனவரி 1ம் தேதியில் ஸ்ரீ இராமர் திருக்கோயில் அயோத்தியில் முற்றும் நிறைவடைந்து விடும், என்றும் , ஸ்ரீ பால இராமர் திருமேனி வருகிற மகர சங்கிராந்தி அன்று (14-01-2024) திருக்கோயிலின் கருவறையில் ப்ரதிஷ்ட்டை செய்யப் படும் என்றும் இந்த ஆண்டு ஜனவரியில் தெரிவித்திருந்தார்.
நீண்ட நெடிய ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஸ்ரீ இராமர் திருக்கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திருக்கரங்களால். கோவில் கருவறை அமைய உள்ள இடத்தில், 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல் வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப் பெற்றது.
இந்திய விடுதலைக்குப் பின் இந்தியாவில் கட்டப் படும் மிகப் பிரம்மாண்டமான முதல் திருக்கோயில் இதுதான் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தக் கோயிலின் கட்டுமானத்திற்குத் திட்டமதிப்பு ரூபாய் 1700 கோடி வரை முடிவு செய்திருந்த போதிலும் ஸ்ரீ இராம பக்தர்களின் காணிக்கையாக மட்டும் 3400 கோடிகளுக்கு மேல் பொருள் உதவி கிடைத்துள்ளது .
கட்டுமான செலவு போக மீதமிருக்கும் பணத்தை அயோத்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப் படும்கோயில் அறக்கட்டளையினர் சார்பில் கூறப்பட்டுள்ளது
54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்ட இத் திருக்கோயில் ஐந்து குவி மாடங்கள் ,மூன்று தளங்களுடன் உருவாக்கப் படுகிறது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உடையதாக , அமைக்கப் பட்டுள்ளது . தரை தளத்தில் 160 தூண்களும் , முதல் தளத்தில் 132 தூண்களும் , இரண்டாவது தளத்தில் 74 தூண்களும்,அமைக்கப் படுகின்றன .12 நுழைவு வாயில்கள் உடைய இக்கோயிலின் திருக்கோபுரம் 161 அடியாகும் .
இத்திருக்கோயிலின் ஸ்ரீ ஆஞ்சநேயர்சில, ஸ்ரீஇராம் யாக சாலை, அனுஷ்ட்டான மண்டபம் , ஸ்ரீ இராமர் வரலாறு மற்றும் தொல்லியல் ஆவணங்களின் கண்காட்சி மண்டபம் , கூட்டுப் பிரார்த்தனை மற்றும் சமய சொற்பொழிவு நடத்துவதற்கான மண்டபம், வேதா,புராண இதிகாச இராமாயண சம்ஸ்க்ருத ஆராய்ச்சி நிலையம், பக்தர்களுக்குத் தியானம் மண்டபம் ,360டிகிரி தியேட்டர் ,கருத்தரங்கம் நடத்துவதற்கான கூடம் ,நூலகம், மகரிஷி வால்மீகி ஆவணக் காப்பகம் ,சிறுவர் சிறுமிகள், குழந்தைகள் விளையாட்டுக் கூடம், சிறப்பு விருந்தினர் தங்குவதற்கான அடுக்ககங்கள் ,மடப்பள்ளி , பிரசாதம் விநியோக பகுதி , மிகப் பெரிய அன்னதான கூடம் , இந்தக் கோயில் வளாகத்தில் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும் முதியோர் செல்வதற்காக தானியங்கி படிக்கட்டுகள் , அவசரக் கால சிகிச்சை மையம்,கோயிலுக்குள் செல்லும் வழியில் ஒவ்வொரு 15 நிமிடதூரங்களில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப் பட்டுள்ளன.மேலும் தீர்த்த யாத்திரை வரும் வெளியூர் வெளிமாநில வெளிநாட்டு பக்தர்களுக்கு உதவும் வகையில் சேவை மையம் மற்றும் வங்கி ஏ டி எம் மையங்களும் அமைக்கப் பட்டுள்ளன.
புயல் மழை வெள்ளம் நிலநடுக்கம் போன்ற இயற்கை பாதிப்புக்களில் இருந்து திருக்கோயிலைப் பாதுகாக்கும் விதமாக கோயிலைச் சுற்றி மூன்று அடுக்குகளில் மரம் வளர்ப்பு மற்றும் நந்தவனம் வளர்ப்பு முறைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இராமர் கோவிலை கட்ட வேண்டும் என்பதற்காக, நாடு முழுக்க இருந்த பல்வேறு மொழிகளில் (தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட) ஸ்ரீராம் என்று பெயர் செதுக்கப்பட்டுள்ள செங்கல்கள் கடந்த 30 வருடங்களாக அனுப்பப்பட்டு தொடர்ந்து வந்து சேர்ந்த இந்தச் செங்கல்கள் பூஜை செய்யப்பட்டு இராமர் கோயில் கட்டுமான பணிகளுக்குப் பயன்படுத்தப் பட்டுள்ளன
2022 ஜூன் மாதம் 1ம் தேதி உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த குழந்தை இராமர் கோயிலின் கருவறை கட்ட அடிக்கல் நாட்டினார்.
குழந்தை இராமர் கோயிலுக்கான கருவறை பீடம் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வந்த கிரானைட் கற்களால் அமைக்கப் பட்டுள்ளது . கீழ்தளத்தில் உள்ள இந்த கருவறையில் தான் மூலவர் ஸ்ரீ இராமர் பிரதிஷ்டை செய்யப் பட இருக்கிறது .
மூலவரை இராம் லல்லா என்கிறார்கள். இராம் லல்லா என்றால் குழந்தை இராமர் அல்லது பால இராமர் எனப்பொருள் படும் . இந்த இராம ஜென்மபூமியில் உள்ள இக்கோயிலின் மூலவர் குழந்தை இராமர் ஆவார்.
அடுத்த ஆண்டு மகர சங்கிராந்தி அன்று நடக்க இருக்கும் ஸ்ரீ இராமர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் .இது சமயம் பல்வேறு நாடுகளில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு ஸ்ரீ இராமருக்கு அபிஷேகம் நடைபெற இருக்கிறது.
உத்திரப் பிரதேசம் அயோத்தி மாவட்டம் அயோத்தியில் நடைபெறும் இந்த மகத்தான விழாவில் கலந்து கொள்வதற்கு இப்போதே பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்துக்கள் ஆயுத்தமாகி வருகிறார்கள்.
2024ம் ஆண்டு சித்ரா ராமநவமியின் முதல் நாளில் ராமபிரானின் பிறந்தநாள் கொண்டாடப்படும். அன்று சரியாக 12 மணிக்கு, சூரிய கதிர்கள் ராம் லல்லா சிலையின் மீது சிறிது நேரம் விழும். அது இராம பக்தர்களுக்கு ஒரு தெய்வீக அனுபவமாக இருக்கும்.
அடுத்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதியில் இருந்து ஏப்ரல் 17ம் தேதி வரைக்கும் அயோத்தி ஸ்ரீ இராமர் திருக்கோயிலில் தொடர் திருவிழாக்கள் நடை பெற இருக்கின்றன..
இங்கே மட்டுமல்ல இனி இந்தியா முழுவதும் ஸ்ரீ இராமருக்கான காலமாகவே இருக்கும்
ஸ்ரீ இராம நாமம் இனி உலகெங்கும் ஒலிக்கட்டும்.
ஜெய் ஸ்ரீ ராம் . ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்.