ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா மறைவு - பிரதமர் மோடி இரங்கல்!
மாரடைப்பு காரணமாக ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் செளதாலா உயிரிழந்தார்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது திடீரென ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். 89 வயதான ஓம் பிரகாஷ் செளதாலா, ஏழு முறை எம்எல்ஏ-வாகவும், ஐந்து முறை ஹரியானா முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
முன்னாள் துணை பிரதமர் செளத்ரி தேவிலாலின் மகனான அவர், கடந்த 2013-ஆம் ஆண்டில் முறைகேடு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஒன்பதரை ஆண்டுகள் கழித்து விடுதலையானார். ஓம் பிரகாஷ் செளதாலாவின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார். இந்தத் தம்பதிக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஓம் பிரகாஷ் செளதாலா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் பல ஆண்டுகளாக மாநில அரசியலில் தீவிரமாக இருந்தார்.
ம் சௌத்ரி தேவி லால் ஜியின் பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முயன்றார். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.