ஹிண்டன்பெர்க் நிறுவனம் மூடல் : பின்னணி என்ன? - சிறப்பு தொகுப்பு!
அதானி குழுமத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், தனது செயல்பாடுகளை நிறுத்தவிட்டு நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் இழுத்து மூடப்படுவதற்கு என்ன காரணம் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2017ம் ஆண்டில் அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை நேட் ஆண்டர்சன் தொடங்கினார். பெரும் நிறுவனங்களின் நிதி நடைமுறைகள் மற்றும் நடவடிக்கைகளில் உள்ள நிதி மோசடிகளை அறிக்கையாக வெளியிட்டு, அதன்மூலம் பெரும் லாபத்தையும் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் பார்த்து வந்தது.
ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் கிட்டதட்ட ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு குற்ற அமைப்பைப் போலச் செயல்படுவதாக பல வல்லுநர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர். புவிசார் அரசியலில், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக, இதுபோன்ற அறிக்கைகளை ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடுவதாகவும், பின்னணியில் சர்ச்சைக்குரிய அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் இருக்கலாம் என்பதையும் பலர் சுட்டிக்காட்டி இருந்தனர்.
2023ம் ஆண்டு, ஜனவரி மாதம், அதானி குழுமத்தின் கார்ப்பரேட் மோசடி என்று அந்நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் முன் வைத்தது. இதன் மூலம் இந்த நிறுவனம் மிகவும் பிரபலமானது. இதன் விளைவாக, அதானி குழுமம் பல லட்சம் கோடிகளை ஓரிரு நாட்களில் இழந்தது.
இது மட்டுமின்றி, அதானி குழும நிதி முறைகேட்டுக்கு பயன்படுத்தபட்ட வெளிநாட்டு நிதியில் பங்கு சந்தை ஒழுங்காற்று வாரிய ( SEBI ) தலைவர் மாதவி புரிக்கும் அவரது கணவருக்கும் பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டையும் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் முன் வைத்தது.
அதானி விவகாரம், சர்ச்சை, நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்து, சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியிடம் மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறு உத்தரவிட்டது. சில உண்மைகளை வேண்டுமென்றே சிதைக்கும் வகையில் செயல்பட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனத்தை செபி குற்றம்சாட்டியது.
இந்நிலையில், ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனதை மூடுவதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் நிறுவனத்தின் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஹிண்டன்பர்க்கைத் தொடங்குவது, வாழ்க்கையின் கனவாக இருந்தது என்று கூறியுள்ள அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன், பாரம்பரிய நிதி பின்னணி இல்லாத தாef ஒரு அரசுப் பள்ளியில் படித்ததாகவும், தான் ஒரு திறமையான மற்றும் சாமர்த்தியமான விற்பனை பிரதிநிதி அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
தன் உறவினர்கள் யாரும் இந்தத் துறையில் இல்லாத நிலையில், சரியான ஆடைகளை அணிய கூடத் தெரியாதவனாகவும், கோல்ஃப் விளையாடத் தெரியாதவனாகவும், பெரும்பாலான வேலைகளில் நல்ல தொழிலாளியாக மட்டுமே இருந்ததாகவும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் நேட் ஆண்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்புற அச்சுறுத்தல்,அழுத்தம், உடல்நலப் பாதிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்று தெளிவு படுத்தியுள்ள ஆண்டர்சன், தாங்கள் அசைத்து பார்க்க நினைத்த நிறுவனங்களை அசைத்துப் பார்த்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.
கோடீஸ்வரர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் உட்பட ஹிண்டன்பர்க்கின் செயல்பாடுகள் மூலம் கிட்டத்தட்ட 100 நபர்கள் மீது சிவில் அல்லது கிரிமினல் குற்ற சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆண்டர்சன்.
இதற்கிடையே, குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லான்ஸ் குடன், அதானி குழுமத்திற்கு எதிராக நீதித் துறை ஏன் வழக்குத் தொடர்ந்தது என்பது குறித்து அமெரிக்க நீதித்துறையின் அட்டர்னி ஜெனரலுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதயுள்ளார். இதனையடுத்து ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இன்னும் சில நாட்களில் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு, பொருளாதாரத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்கும் நிதி நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச பொருளாதார சந்தைகளைப் பாதிக்கும் வகையில், ஹிண்டன்பர்க் போல நிதி மோசடி அறிக்கைகள் வெளியிடும் நிறுவனங்களின் மீது ட்ரம்ப் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், அந்நிறுவனங்கள் மீது விசாரணையைத் தீவிரப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டச் சிக்கல் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே ஹிண்டன்பர்க் மூடப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், முதலீடுகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல்வாதிகளுடனான தொடர்புகள் குறித்த தகவல்களையும் மறைக்கவே ஹிண்டன்பர்க் மூடப்படுவதாகவும் அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில்,பாஜகவின் தொழில்நுட்ப பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமித் மாளவியா, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் செயல்பாடுகளை அமெரிக்க நீதித்துறை, விசாரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் ஹிண்டன்பர்க்கின் அறிக்கைகளை நம்பி, அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தியும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்தும் வந்தனர் என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் சந்தேகத்திற்குரிய ஜார்ஜ் சோரோஸ் நிதியளிக்கும் ஹிண்டன்பர்க்கின் அறிக்கைகளை தங்கள் நடவடிக்கைகளின் அடிப்படையாக வைத்திருந்தனர் என்றும், ஹிண்டன்பர்க்கும் அதன் ஆதரவாளர்களும் சில்லறை முதலீட்டாளர்களின் பெரும் பங்களிப்பைக் காணும் இந்திய பங்குச் சந்தையைச் சிதைக்க முற்பட்டனர் என்றும் கூறியுள்ளார். இப்படித் தான் காங்கிரஸ் கட்சி, நாட்டுக்கு எதிரான தீய எண்ணத்துடன்செயல்பட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.