ரூ.1000 கோடி டாஸ்மாக் முறைகேடு போராட்டம் - அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!
1000 கோடி டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பாஜகவின் போராட்டத்தில் பங்கேற்க சென்ற அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,
Advertisement
சென்னையில் நேற்று காலை நடைபெற இருந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நீலாங்கரை போலீசார் அக்கரை பகுதியில் சோதனை சாவடியில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்திய சோதனைகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து, பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கைது செய்து சென்னை அக்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்தனர். பின்னர் நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு சுமார் 9 மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கைதான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சுமார் 110 பேர் மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் பாஜகவினரின் கைதை கண்டித்து மதுரை தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலை அருகில் மதுரை மாநகர் தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 85 பேர் மீது மதுரை தல்லாகுளம் கால்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.