10,000 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா அனுமதி : மத்திய அரசு
இந்திய இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
இது குறித்து மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில்,
மத்திய அரசின் முயற்சியின் விளைவாக, 2014-ல் 136,020 ஆக இருந்த இந்தியாவுக்கான ஹஜ் புனித யாத்திரை ஒதுக்கீடு 2025-ல் 175,025 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் இந்திய ஹஜ் கமிட்டி மூலம் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டிற்கான பயண ஏற்பாடுகளை நிர்வகிக்கிறது. இது நடப்பு ஆண்டில் 122,518 ஆக இருந்தது. விமானப் பயணம், மினா முகாம்கள், தங்குமிடம் மற்றும் கூடுதல் சேவைகள் உட்பட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சவுதி அரேபிய அரசின் தேவைகளுக்கு ஏற்ப காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட சவால்களை எதிர்கொள்ளும் வகையில், 26 குழுக்களுக்கு ஹஜ் ஒதுக்கீடு மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தால் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டது. எனினும் இந்தக் குழுக்கள் சவுதி அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உறுதிசெய்யத் தவறிவிட்டனர்.
மேலும் சவுதி விதிமுறைகளின் கீழ் தேவைப்படும் மினா முகாம்கள், தங்குமிடம் மற்றும் யாத்ரீகர்களின் போக்குவரத்து உள்ளிட்ட கட்டாய ஒப்பந்தங்களை இறுதி செய்ய இந்தக் குழுக்கள் தவறிவிட்டன.
இந்த விஷயத்தில் அமைச்சர்கள் மட்டத்தில் சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அரசின் தலையீட்டின் காரணமாக, மினாவில் தற்போது கிடைக்கும் இடத்தின் அடிப்படையில் 10,000 யாத்ரீகர்கள் தொடர்பான பணிகளை முடிக்க அனைத்து ஹஜ் பயண ஏற்பாட்டாளர்களுக்காக ஹஜ் இணையதளத்தை மீண்டும் திறக்க சவுதி ஹஜ் அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.