105 வயது மூதாட்டிக்கு பிறந்த நாள் கொண்டாடிய உறவினர்கள்!
செங்கல்பட்டு அருகே 105 வயதை எட்டிய மூதாட்டியின் பிறந்தநாள் விழாவை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
Advertisement
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த நாவலூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி கண்ணம்மா 105 வயதை எட்டியதை அடுத்து, அவருக்கு பிறந்த நாள் விழா கொண்டாட அவரது மகள் மற்றும் அவர்கள் வழி பேரன், பேத்திகள், உறவினர்கள் முடிவு செய்தனர். இதற்காக, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியை வாடைக்கு எடுத்து அலங்கரித்தனர்.
புத்தாடை அணிந்து கெத்தாக வந்த மூதாட்டியை , விழா மேடைக்கு பல்லக்கில் வைத்து தூக்கி வந்தனர். உறவினர்கள் ஆரவாரத்தைத் தொடர்ந்து, பேரப்பிள்ளைகள் நடனமாடினர். இதனால், மூதாட்டியும், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பல்லக்கில் அமர்ந்தபடியே உற்சாகமாக நடனமாடி அசத்தினார்.
விழா மேடையில் நடுநாயமாக அமர வைக்கப்பட்ட மூதாட்டி கண்ணம்மா, தனது மகள் மற்றும் பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன்கள் என 62 பேருடன் இணைந்து, 105 -வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார்.
அப்போது, "ஹேப்பி பர்த்டே பாட்டி" என அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து பாடல் பாட, மூதாட்டி கண்ணம்மாபுன்னகையுடன் பிறந்த நாள் கேக் வெட்டினார்.
இதனால் மூதாட்டி கண்ணமாவிடம் மகள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன் என அனைவரும் ஆசி பெற்றனர். மேலும், குழுவாகவும், தனித்தனியாகவும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.