For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

128 வயது துறவி சிவானந்தா பாபா : அனைத்து கும்பமேளாவிலும் பங்கேற்ற அதிசயம் - சிறப்பு தொகுப்பு!

08:00 PM Jan 17, 2025 IST | Sivasubramanian P
128 வயது துறவி சிவானந்தா பாபா   அனைத்து கும்பமேளாவிலும் பங்கேற்ற அதிசயம்   சிறப்பு தொகுப்பு

கடந்த 100 ஆண்டுகளாக பிரயாக்ராஜ், நாசிக், உஜ்ஜைன் மற்றும் ஹரித்வார் ஆகிய இடங்களில் நடைபெறும் ஒவ்வொரு கும்பமேளாவிலும் கலந்து கொள்கிறார் ஒருவர் என்றால் ஆச்சரியமாக உள்ளது இல்லையா ? அவர் தான் 128 வயதான சுவாமி சிவானந்த பாபா. அந்த அற்புதமான இந்து மத துறவியைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சுவாமி சிவானந்தா பாபா 1896ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, பிரிட்டிஷ் இந்தியாவில் பெங்கால் மாகாணத்தின் சில்ஹெட் மாவட்டத்தில், ஒரு பிரபலமான பெங்காலி பிராமண கோஸ்வாமி குடும்பத்தில் பிறந்தார். அவ்வூரில் வாழ்ந்த பெரிய துறவியான தாகுர்பானியின் 10வது வழித்தோன்றல் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.

Advertisement

வைஷ்ணவர்களான பாபாவின் தந்தை ஸ்ரீநாத் கோஸ்வாமி மற்றும் தாயார் பகபதி தேவி தங்களின் வாழ்வாதாரத்துக்காக வீடு வீடாக பிச்சை எடுப்பார்கள். பிரசாதமாக பிச்சை பெற்ற உணவை முதலில் ஸ்ரீமன் நாராயணனுக்குப் படைத்தது போக, மிச்சம் அவர்களின் பசியைப் போக்கப் போதுமானதாக இல்லை.

இந்நிலையில், தங்களின் 4 வயதான மகனான சிவானந்தாவை, மேற்கு வங்கத்தில் ( Nabadwip) நபத்விப் நகரில் வசித்து வந்த வைஷ்ணவ துறவியான ஓம்காரானந்த கோஸ்வாமியிடம் ஒப்படைத்தனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓம்காரானந்த கோஸ்வாமிஜியால் சிவானந்தா தனது பெற்றோரைச் சந்திக்க சில்ஹெட்டுக்கு அனுப்பிவைக்கப் பட்டார்.

Advertisement

சிவானந்தா தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ​​தனது மூத்த சகோதரி ஏற்கனவே பசி மற்றும் பட்டினியால் இறந்துவிட்டதை அறிந்தார். சில நாட்களுக்குப் பிறகு, அவரது தாயார் மற்றும் தந்தையார் இருவரும் ஒரே நாளில் இறந்தனர். பெற்றோரின் இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்த சிவானந்தா, தனது குருவின் ஆசிரமத்துக்குத் திரும்பினார். சிவானந்தா தனது குரு நாதரிடம் "மந்திர தீட்சை" பெற்று, யோகா பயிற்சி மற்றும் ஆன்மீகப் பயிற்சி இரண்டிலுமே தேர்ச்சி பெற்றார்.

தனது முழு வாழ்க்கையையும் அனைத்து உயிரினங்களின் நல்வாழ்வுக்காகவும், கடவுளின் பெயரின் மகிழ்ச்சிக்காகவும், மனிதகுலத்தின் சேவைகளுக்காகவும் சுவாமி சிவானந்தா அர்ப்பணித்தார்.

1925ம் ஆண்டு, குருஜியால் லண்டனுக்கு அனுப்பப்பட்ட சுவாமி சிவானந்த பாபாஜி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக 6-கண்டங்கள் முழுவதும் பயணித்தார். சென்ற இடமெல்லாம் இந்துமதம் கற்று தரும் வாழ்க்கைக் கலையை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

தனது குருஜியின் அழைப்பின் பெயரில் 1959ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். ஓம்காரானந்த கோஸ்வாமிஜி மறைவுக்குப் பின் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டார்.

குறிப்பாக வடகிழக்கு இந்திய மாநிலங்களில் வாழும் இந்திய மக்களுக்கு தன்னலமற்ற சேவையைச் செய்து வந்தார். கடந்த பல ஆண்டுகளாக, பூரி, பங்குரா, பிஷ்ணுபூர், கர்பேட்டா, புருலியா மற்றும் வாரணாசி, நபத்விப், பிர்பூம், பழங்குடியினர் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான தொழுநோயால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அயராது சேவை செய்து வருகிறார்.

1979ஆம் ஆண்டிலிருந்து நிரந்தரமாக வாரணாசியில் சுவாமி சிவானந்த பாபாஜி வசித்து வருகிறார். மிக எளிமையான வாழ்வை மேற்கொள்ளும் சுவாமி சிவானந்த பாபாஜி, எந்த விதமான நன்கொடையையும் யாரிடமும் ஏற்பதில்லை. சீடர்கள் தங்கள் குருவின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறார்கள்.

128 வயதிலும், சுவாமி சிவானந்த பாபாஜி, தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் யோகா, பிராணாயாமம், மற்றும் ஒரு மணி நேரம் நடை பயிற்சி மேற்கொள்கிறார். பிறகு, நாள் முழுவதும் ஜபம், தியானம், பூஜை ஆகியவற்றில் தன் நேரத்தை அர்ப்பணிப்புடன் செலவழிக்கிறார். ஒருநாளும் பகலில் தூங்காத சுவாமி சிவானந்த பாபாஜி, தன்னை நாடி வருபவர்களுக்கு உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வை அடைய வழி காட்டுகிறார்.

இனிப்பு மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை முற்றிலுமாக தவிர்த்த சுவாமி சிவானந்த பாபாஜி, வேகவைத்த காய்கறிகளுடன் அரிசி,மற்றும் ரொட்டியை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்கிறார். குறிப்பாக, பால் அல்லது பழம் சாப்பிடுவதில்லை. தினமும் இரவு 9 மணிக்கு சுவாமி சிவானந்த பாபாஜி உறங்கச் செல்கிறார்.

2019ம் ஆண்டு பெங்களூரு காந்திரபா ஸ்டேடியத்தில் நடந்த உலக யோகா தின கொண்டாட்டத்தில் யோகாவை செய்து காட்டி, அனைவரையும் சுவாமி சிவானந்த பாபாஜி அசத்தினார். கோவிட்-19 தடுப்பூசி எடுத்துக்கொண்ட மிக வயதான இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர் ஆனார். யோகா மற்றும் மனித சமுதாயத்தின் மீது கருணை காட்டும் பணிக்காக, 2022ம் ஆண்டு, அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் பத்மஸ்ரீ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்தியாவின் சொல்லப்படாத கதைகளின் 1000 திரைப்பட பயணத் தொடரில், சுவாமி சிவானந்த பாபாஜியை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் நேர்காணல் செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த 100 ஆண்டுகளில் Prayagraj, Nashik, Ujjain and Haridwar ஆகிய இடங்களில் நடைபெற்ற கும்பமேளாவி பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

மகிழ்ச்சியான அன்றாட வாழ்க்கை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், கடவுளுக்கு ஒப்புவித்த சரணாகதி மற்றும் மனிதகுலத்துக்கான சேவை இவற்றின் பிம்பமாக சிவானந்த பாபாஜி வாழ்ந்து வருகிறார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாராட்டியது போல், பாபா சிவானந்தாவின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம் என்பதில் ஐயமில்லை.

Advertisement
Tags :
Advertisement