20 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் கிராமத்தில் பிறந்த முதல் செல்லக் குழந்தை - சிறப்பு கட்டுரை!
குடும்பத்தின் செல்லப் பிள்ளை என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறோம். ஒரு கிராமத்துக்கே ஒரு செல்லப் பிள்ளை என்றால் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?
யார் அந்த செல்லப் பிள்ளை? எந்த நாட்டில் எந்த கிராமத்தில் வளர்கிறது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.Advertisement
குழந்தையின் பிறப்பு என்பது குடும்ப வாழ்க்கைக்கான கடவுள் தந்த பரிசாகும். அதுவும் விலைமதிப்பற்ற பரிசாகும். குழந்தை பிறப்பு, குடும்பத்துக்காக புது வரவு மட்டுமல்ல, குடும்பத்தின் மகிழ்ச்சியான நிகழ்வாகும். அதுவும் ஜப்பானில், குழந்தை பிறப்பு என்பது கூடுதல் மகிழ்ச்சியான தருணமாகும்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் அதிக அளவில் குறைந்து வருகிறது. கிட்டத்தட்ட 32 சதவீத ஆண்களும், 24 சதவீத பெண்களும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 1970ம் ஆண்டில் நடந்த திருமணங்களின் எண்ணிக்கையில் 40 சதவீதம் குறைந்திருக்கிறது.
2022ம் ஆண்டில், ஜப்பானில் 800,000 க்கும் குறைவான குழந்தைகளே பிறந்துள்ளன. மேலும் ஜப்பான் பழங்குடி மக்கள் தொகை 5 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. ஜப்பான் மக்கள் தொகையில், அபாய கட்டத்தில் இருப்பதாக எச்சரித்துள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஜப்பான் ஒரு சமூகமாக தொடர்ந்து செயல்பட முடியுமா? என்ற ஐயத்தையும் எழுப்பியிருக்கிறார்.
ஜப்பானின் ஒசாகாவின் வடக்கே உள்ள ஒரு சிறிய கிராமம்தான் இச்சினோனோ. இச்சினோனோ ஜப்பானின் மக்கள்தொகை இல்லாத 'பொம்மை கிராமங்களில்' ஒன்றாகும்.
மொத்தமே இந்த சிறிய கிராமத்தில் 53 பேர் வாழ்கின்றனர். அதிலும் பெரும்பாலானோர் 65 வயதை கடந்த முதியவர்களாவர். கிராமவாசிகள் பெரும்பாலோருக்குப் பிள்ளைகள் உண்டு என்றாலும் படிப்பு காரணமாக நகரத்துக்குச் சென்றவர்கள் மீண்டும் கிராமத்துக்குத் திரும்பவே இல்லை.
வெறுமையைப் போக்க கிராமவாசிகள் பொம்மைகளை நம்பி இருக்கின்றனர் . அவரவர் வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் பொம்மைகளை வைத்துள்ளனர்.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கிராமத்தில் பிறந்த முதல் குழந்தை கேட்டோ தான்.
அதனால், தற்போது இரண்டு வயதாகும் குரானோசுகே கேட்டோ (Kuranosuke Kato), இச்சினோனோ கிராமத்துக்கே செல்லப் பிள்ளையாக வளர்கிறான் . குரானோசுகே கேட்டோவை கிராம மக்கள் தங்கள் பிள்ளையாகவே பார்க்கிறார்கள்.
கிராம மக்கள் அவரவர் வீட்டில் சமைத்த உணவைக் கொண்டு வந்து குரானோசுகே கேட்டோவுக்கு ஊட்டி விடுகிறார்கள். குறுநடை போடும் இந்த குழந்தை தங்கள் பெருமை என்று பெருமிதத்துடன் கூறுகிறார், 74 வயதான கிராமத் தலைவர் சவயாமா பீம்ஸ்.
33 வயதான ரை கேட்டோ மற்றும் 31 வயதான தோஷிகி கேட்டோ ஆகியோர் 2021 ஆம் ஆண்டில், பெரிய நகரமான ஒசாகாவிலிருந்து இச்சினோனோ கிராமத்துக்குக் குடிபெயர்ந்தனர்.
தங்கள் மகன் இந்த கிராமத்தில் பிறந்ததே சாதனை தான் என்று சொல்லும் பெற்றோர், எந்த சாதனையும் செய்யாமலேயே, ஊர் மக்களால் குரானோசுகே கேட்டோ போற்றப்படுவதாகவும், என்று, பெரியவர்களின் அன்பு, ஆதரவு மற்றும் நம்பிக்கையால் வளர்க்கப் படுவதாகவும் கூறுகின்றனர்.
ஜப்பான் பிரதமர் இஷிபா அழிந்துவரும் கிராமங்களை மேம்படுத்த மானியங்களை இரட்டிப்பாக்குவது உள்ளிட்ட கொள்கைகளை முன்வைத்து இளைய ஜப்பானை மீண்டும் உருவாக்க உறுதியளித்துள்ளார்.
என்றாலும், குரானோசுகே கேட்டோவுக்கு சம வயதுடைய குழந்தைகள் விளையாட இல்லாதது ஒரு குறையாகவே உள்ளது .