2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? தவெக மறுப்பு!
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் தவெக கூட்டணி அமைக்கவுள்ளதாக வெளியான செய்தி, அடிப்படை ஆதாரமற்றது என தவெக தலைமை நிலைய செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும், அதற்கான தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து தவெக தலைமை நிலைய செயலகம் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தவெக-வின் கொள்கைகள், எதிரிகள் மற்றும் தேர்தல் நிலைப்பாடு குறித்து கழக தலைவர் விஜய் தெளிவாக விளக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026-ல் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் தவெக வகுத்து வருவதாகவும், இந்த சூழலில் தவெக அதிமுக-வுடன் கூட்டணியமைக்க உள்ளதாகவும், தொகுதி பங்கீடு குறித்து பேசி வருவதாகவும் வெளியாகியுள்ள செய்தி அடிப்படை ஆதாரமற்றது எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன், தவெக-வின் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்ட இதுபோன்ற செய்தி முற்றிலும் தவறானது எனவும், இது போன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை நினைவூட்ட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்களை குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் எனவும் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.