For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

2036 இந்தியாவில் ஒலிம்பிக் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு?

09:05 AM Jun 29, 2025 IST | Murugesan M
2036 இந்தியாவில் ஒலிம்பிக்    அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் புதிய தலைவர்க் கிறிஸ்டி கோவென்ட்ரி, 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரத் தேர்வு செயல்முறையை இடைநிறுத்தி வைத்துள்ளார். மேலும், ஒலிம்பிக் ஏலத்தைப் பற்றி விவாதிப்பதற்கு இந்தியக்குழு சுவிட்சர்லாந்தில் உள்ள Lausanne நகருக்கு வர இருப்பதையும் உறுதி படுத்தியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஒலிம்பிக் போட்டி நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு, 2032 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற உள்ளது.

Advertisement

பொதுவாகவே, 12 ஆண்டுகளுக்கு முன்னதாக, ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரம் தேர்வு செய்யப் பட்டிருக்கும். அப்போதுதான், போட்டி நடைபெறும் மைதானங்கள் உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியும்.

கடந்த ஆண்டு 2023ம் ஆண்டு, மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 141வது அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2036ம் ஆண்டு இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற லட்சியத்தை அறிவித்தார். இதைத் தொடர்ந்து அதற்கான உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

இந்திய விளையாட்டு ஆணையத்தின் Mission Olympic Cell வெற்றிகரமான ஒலிம்பிக் ஏலத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையைத் தயாரித்தது. அதன் அடிப்படையில், 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் Olympic Committee’s Future Host Commission-க்கு விரிவான அறிக்கை அனுப்பியுள்ளது.

ஒலிம்பிக்கை நடத்தும் நாடு என்கிற வகையில், 2036ம் ஆண்டு ஒலிம்பிக்கில் யோகா, கோகோ, கபடி, T20 கிரிக்கெட், செஸ், ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளைச் சேர்க்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி, ஒரு முறையான விருப்பக் கடிதத்தைச் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் சமர்ப்பித்துள்ளது.

இதன் மூலம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடனான பல மாத பேச்சுவார்த்தைக்குப் பின் இந்தியாவில் ஒலிம்பிக் என்ற லட்சிய திட்டத்தில் முதல் உறுதியான நடவடிக்கையை இந்திய ஒலிம்பிக் சங்கம் எடுத்து வைத்தது.

2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த கத்தார், சவுதி அரேபியா, மெக்சிகோ, இந்தோனேசியா, துருக்கி, போலந்து, எகிப்து மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் (Kirsty Coventry) கிர்ஸ்டி கோவென்ட்ரி, ஒலிம்பிக் ஏலத்தை இடை நிறுத்தி வைத்துள்ளார். இந்தியக் குழுவின் வருகையை உறுதிப்படுத்திய Kirsty Coventry, சில முக்கிய விஷயங்கள் குறித்து இந்தியக் குழுவிடம் விவாதிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

2036 ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய பிரதிநிதிகள் குழுவில், மத்திய விளையாட்டுத் துறைச் செயலாளர் ஹரி ரஞ்சன் ராவ், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர்ப் பி.டி. உஷா, தலைமை நிர்வாக அதிகாரி ரகுராம் ஐயர், குஜராத் மாநில விளையாட்டுத் துறை அமைச்சரும், மாநிலத்தின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக முதன்மைச் செயலாளரும் மற்றும் அகமதாபாத் நகராட்சி ஆணையரும் இடம்பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான ஏலத்தில் கடுமையான போட்டியை இந்தியா எதிர்கொள்கிறது. இருந்த போதிலும் அகமதாபாத் இந்தியாவின் ஒலிம்பிக் நகரமாக அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2036 கோடைகால ஒலிம்பிக் போட்டிக்கான ஏலத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு மிக விலையுயர்ந்த ஒலிம்பிக்கை நடத்த இந்தியா இலக்கு வைத்துள்ளது. அதன்படி, இந்தியாவின் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு நிதிச் செலவு திட்டம் இரண்டு தனித்தனி பட்ஜெட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதலாவது, ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாட்டுக் குழு (OCOG) பட்ஜெட் ஆகும். இது, அதிகப் பட்சமாக 41,100 கோடி ரூபாய் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இரண்டாவது, ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாட்டுக் குழு அல்லாத பட்ஜெட் ஆகும். இந்தப் பட்ஜெட் அதிகப் பட்சமாக 22,900 கோடி ரூபாய் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

இந்தியாவில் நடத்தப்படும் ஒலிம்பிக் திருவிழாவுக்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 64,000 கோடி ரூபாய் ஆகும். அனைத்து நாடுகளிடையே அமைதி, நட்பு மற்றும் கூட்டு முன்னேற்றம் தேவைப்படும் நேரத்தில் இந்தியா ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது மிக அவசியமானதாகும்.

Advertisement
Tags :
Advertisement