220 கோடி ஆண்டுகள் பழமையான உலகின்பெரிய பள்ளம் கண்டுபிடிப்பு!
220 கோடி ஆண்டுகளுக்கு முன் விண்கல் தாக்கியதில் உருவான மிகப்பெரிய பள்ளத்தை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். உலகின் மிகப் பழமையான இந்த விண்கல் பள்ளம் பூமியின் வரலாறு மற்றும் உயிர்களின் தோற்றம் பற்றிய கருத்தை மறு ஆய்வு செய்ய உதவும் என்று கூறப்படுகிறது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் பில்பரா பகுதியின் வடதுருவப் பகுதியில் உள்ள பாறை அடுக்குகளை, (Curtin University) கர்டின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு செய்து வந்தது.
கர்டின் ஸ்கூல் ஆஃப் எர்த் அண்ட் பிளானட்டரி சயின்சஸ் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவின் புவியியல் ஆய்வுக் குழுவால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
சுமார் மூன்றரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய விண்கல் தாக்கி உருவான மிகப் பெரிய பள்ளத்தை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தப் பள்ளம் சுமார் 2.2 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே இது பூமியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான பள்ளமாகும் என்று ஆய்வின் இணை தலைவரான டிம் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன், தென்னாப்பிரிக்காவில் உள்ள வ்ரெட்ஃபோர்ட் பள்ளம் தான் மிகப் பழமையான பள்ளம் என்று கருதப்பட்டது. இது இரண்டு பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 300 கிலோ மீட்டர் அகலத்தில், இன்றும் காணக்கூடிய மிகப்பெரிய பள்ளமாகும்.
இப்போது ஆய்வு செய்த பகுதியில், சிதறல் கூம்புகள் இருப்பதன் மூலம் இந்தப் பள்ளத்தை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். "சிதறல் கூம்புகள்" என்பது, விண்கல் தாக்கங்களிலிருந்து தீவிர அழுத்தத்தினால் மட்டுமே உருவாகும் தனித்துவமான பாறை வடிவங்கள் ஆகும். இது அழகான, மென்மையான சிறிய கட்டமைப்புகள் போன்ற வடிவங்களில் இருக்கும். தலைகீழான பேட்மிண்டன் ஷட்டில் காக் போல இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பள்ளத்துக்கு வட துருவப் பள்ளம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மணிக்கு 36,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பூமியைத் தாக்கும் ஒரு விண்கல்லால் இந்த பள்ளம் உருவாகி உள்ளது. இந்த விண்கல் தாக்குதல், பெரிய கிரக நிகழ்வாக இருந்திருக்கும் என்றும் கூறப் படுகிறது.
பல கோடி ஆண்டுகளில் ஏற்பட்ட அரிப்பு காரணமாக இந்த பள்ளம் கண்களுக்குத் தெரியாமல் போயிருக்கலாம் என்றும் ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தொடக்க காலத்தில், பூமியில் விண்கற்கள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தின ? என்பது பற்றிய புதிய ஆராய்ச்சியை இந்த பள்ளம் தொடங்கி வைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
விண்கல் தாக்கத்தால் ஏற்பட்ட பள்ளங்கள், உலகின் நுண்ணுயிர் வாழ்க்கைக்கு ஏற்ற சூழல்களை உருவாக்கியிருக்கலாம் என்று இன்னொரு முன்னணி ஆராய்ச்சியாளரான பேராசிரியர் கிறிஸ் கிர்க்லேண்ட் தெரிவித்துள்ளார்.
பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி எவ்வாறு உருவானது என்பதை பற்றி மேலும் பல புதிய விளக்கத்தை இந்த ஆய்வின் மூலம் கண்டறிய முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது ஒரு முக்கியமான கன்டுபிடிப்பு என்று கூறியுள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியல் அறிஞர் மார்க் நார்மன், பள்ளத்தின் சரியான அளவைக் கொண்டு மட்டும் பூமியின் தோற்றம் பற்றிய முடிவுக்கு வந்துவிட முடியாது என்றும், பூமியின் தோற்றம் பற்றி முடிவுக்கு வர கூடுதல் சான்றுகள் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனியில் நார்ட்லிங்கர் ரைஸ், ஆஸ்திரேலியாவில் ட்னோராலா என்ற கோசஸ் பிளஃப் பள்ளம், தென்னாப்பிரிக்காவில் Vredefort வ்ரெட்ஃபோர்ட் பள்ளம், மெக்சிகோவில் Chicxulub சிக்சுலப் பள்ளம், அமெரிக்காவில் பாரிங்கர் பள்ளம் என 5 முக்கிய பள்ளங்கள் விண்கல் தாக்குதலால் உருவாகி உள்ளன.
இந்த ஐந்து தாக்கப் பள்ளங்களும் வேறுபட்டவை ஆகும், மேலும் ஒவ்வொன்றும் தனித்துவமானவை ஆகும். ஆனாலும் பூமியின் தோற்றம்,உயிர்களின் தோற்றம் பற்றிய கேள்விகள் தீர்க்கப் படாமல் உள்ளன.
பூமிக்கு பாதுகாப்பு வளிமண்டலமான ஓசோன் இல்லாத போது, சுமார் மூன்று முதல் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இன்னும் பல பள்ளங்கள் உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்
செயற்கைக்கோள் இமேஜிங் தரவுத்தொகுப்புகள், செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள், பூமியின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள புவியியல் ஆச்சரியங்களை எளிதில் ஆய்வு செய்ய உதவுகின்றன.