செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

250 மில்லியன் ஆண்டு பூமியின் ரகசியம் : கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

08:05 PM Mar 15, 2025 IST | Murugesan M

பூமியின் மேற்பரப்பிலிருந்து 410 முதல் 660 கிலோமீட்டர் கீழே அமைந்துள்ள மேன்டில் மாற்ற மண்டலத்தில் வழக்கத்துக்கு மாறாக அடர்த்தியான பகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கடலில் புதைந்து கிடந்த பண்டைய கால கடற்பரப்பு, பூமியின் ஆழமான ரகசியங்களை வெளிப்படுத்துகிறது.

Advertisement

இந்த புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ஏன் முக்கியமானது ? இதனால், எதிர்காலத்தில் பூமியின் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பூமியின் ஆழத்தை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும், நமது பூமியின் அடுக்குகளின் படத்தை உருவாக்க புவியியலாளர்கள் பல்வேறு அறிவியல் முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

Advertisement

பூமியின் அடுக்குகளை மேலோடு,மேன்டில், வெளிப்புற மையம், மற்றும் உள்மையம் என்று நான்கு வகையாக விஞ்ஞானிகள் பிரித்துள்ளனர்.

நாம் பூமியின் மீது நடக்கும் பகுதியே பூமியின் மேலோடு எனப்படுகிறது. இந்த பகுதி நிலம் மற்றும் கடல் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நிலப்பகுதி 35 முதல் 70 கிலோமீட்டர் குறைந்த அடர்த்தி கொண்டதாகும். பெரும்பாலும் கிரானைட் பாறையால் ஆனதாகும். கடலின் பெரும்பகுதியை கடல் மேலோடு உருவாக்குகிறது 5 - 7 கிலோமீட்டர் அடர்த்தியாகவும், பெரும்பாலும் பாசால்ட் பாறைகளால் ஆனதாகவும் உள்ளது. வேடிக்கை என்னவென்றால், பூமியின் மொத்த அளவில் 1 சதவீதம் மட்டுமே மேலோடு ஆகும்.

மேலோட்டத்திற்குக் கீழே கவசம் போல உள்ள பகுதியே மேன்டில் எனப்படுகிறது. அரை திரவமாக உள்ள இந்தப்பகுதி பிளாஸ்டிக் போன்றதாகும். 2,900 கிமீ தடிமன் கொண்ட இது பூமியின் மொத்த அளவில் 84 சதவீதம் ஆகும். இது 3 முக்கிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேன்டலுக்கு அடியில் உள்ள பகுதியே பூமியின் வெளிப்புற மையப்பகுதியாகும். திரவ இரும்பு மற்றும் நிக்கல் அடுக்குகளான இந்த பகுதி சுழலும் போது, சுழன்று பூமியின் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. இந்த காந்தப்புலம் தான் சூரியனின் அதிக கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது. வெளிப்புற மையப்பகுதி 2,200 கிலோமீட்டர் தடிமன் கொண்டதாகும்.

பூமியின் மிக ஆழமான அடுக்கு தான் உள் மையப்பகுதி எனப்படுகிறது. இது இரும்பு மற்றும் நிக்கலால் ஆனதாகும். அழுத்தம் மிக அதிகமாக இருப்பதால் இனி உலோகங்கள் திரவமாக இருக்காது. 1,230 முதல் 1,530 கிலோமீட்டர் தடிமன் கொண்ட உள் மையப்பகுதியின் வெப்பநிலை சூரியனின் மேற்பரப்பைப் போலவே வெப்பமாக இருக்கும். இதன் வெப்ப நிலை 6000 டிகிரி செல்ஸியஸ் ஆகும். பூமியின் இந்த உள் மையப்பகுதி ஆண்டுக்கு 1 மில்லிமீட்டர் அளவு வளர்ந்து வருகிறது

இந்நிலையில் தான், 250 மில்லியன் ஆண்டுகளாகப் புதைக்கப்பட்ட, பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் மறைக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய கடற்பரப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

தென்கிழக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள டெக்டோனிக் தட்டு எல்லையான கிழக்கு பசிபிக் எழுச்சியை மேரிலாந்து பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வந்தனர்.

புவியியல் முதுகலை ஆய்வாளர் ஜிங்சுவான் வாங் தலைமையிலான இந்த ஆராய்ச்சிக் குழு, டைனோசர்களின் காலத்தில் பூமியின் மேன்டலில் மூழ்கிய ஒரு பண்டைய கடற்பரப்பை கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வில், நில அதிர்வு அலைகளைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் மேன்டலுக்குள் ஆழமான கட்டமைப்புகளின் விரிவான வரைபடங்களை உருவாக்கியுள்ளனர்.

பூமியின் மேற்பரப்பிலிருந்து 410 முதல் 660 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மேன்டில் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக ஒரு தடிமனான பகுதியை ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

Science Advances இதழில்,வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கை ,பூமியின் உட்புறம் குறித்த முந்தைய ஆய்வு முடிவுகளைத் தலைகீழாக மாற்றி இருக்கிறது.

நீண்ட காலமாகவே விஞ்ஞானிகள், கடல் மேலோடு பகுதி, மேன்டலுக்குள் விரைவில், கலந்து கரைகிறது என்று நம்புகின்றனர்.

பண்டைய அடுக்குகள் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளாக நீடிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது பூமியின் கீழுள்ள தட்டுக்களின் நகர்வு பற்றிய பழைய ஆய்வு முடிவுகளுக்கு நேர் எதிராக உள்ளது.

இந்த புதைக்கப்பட்ட கடற்பரப்பில் உள்ள பொருள் தாங்கள் எதிர்பார்த்ததை விட மெதுவாக நகர்கிறது என்று ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பூமியின் புவியியல் பரிணாம வளர்ச்சியில் புதிய நுண்ணறிவுகளை வழங்குவதோடு, பூமியின் கடந்த காலத்தையும் பிற கிரக ரகசியங்களையும் அறிந்து கொள்ள இந்த ஆராய்ச்சி தூண்டுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆராய்ச்சியை, பசிபிக் பெருங்கடலின் பிற பகுதிகளுக்கும், அதற்கு அப்பாலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

பூமியின் ஆழமான உட்புறத்தில் இன்னும் பல பண்டைய அமைப்புக்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன என்று ஆய்வுக் குழுவின் தலைவர் ஜிங்சுவான் வாங் கூறியுள்ளார்.

 

Advertisement
Tags :
FEATUREDMAINThe secret of the 250 million years old Earth: Scientists discover!250 மில்லியன் ஆண்டு பூமியின் ரகசியம்விஞ்ஞானிகள்பூமி
Advertisement
Next Article