3ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண் விளையாட்டு குடுவை, வளையல்கள் கண்டெடுப்பு!
விஜயகரிசல் குளம் பகுதியில் நடைபெறும் 3ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண் விளையாட்டு குடுவை, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, வட்டச்சில்லு, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 3 ஆயிரத்து 250 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது சிறிய அளவிலான சுடுமண் குடுவை, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி தெரிவித்துள்ளார்.
விஜயகரிசல்குளம் பகுதியில் முன்னோர்கள் வசித்து தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், அதிகமான சங்கு வளையல்களும், சிறுவர்களுக்கான சிறிய அளவிலான விளையாட்டுப் பொருட்களும் கிடைக்கப்பெற்றதாக தெரிவித்துள்ளார்.