For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

3டி-பிரிண்டிங் ராக்கெட்: இந்தியா புது சாதனை!

09:00 PM Jun 01, 2024 IST | Murugesan M
3டி பிரிண்டிங்  ராக்கெட்   இந்தியா புது சாதனை

உலகின் முதல் 3டி பிரிண்டிங் ராக்கெட்டை கடந்த வாரம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்து இருக்கிறது ஸ்டார்ட் அப் விண்வெளி நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

3டி-பிரிண்டிங் ராக்கெட் என்பது, 3D-பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு ராக்கெட்டாகும்.

Advertisement

பெரும்பாலான பாரம்பரிய ராக்கெட்டுகளுடன் ஒப்பிடும்போது, ​​3D-பிரிண்டிங் வகை ராக்கெட்டுக்கள், அதிக எரிபொருள் திறன் கொண்டதாகவும், எடையில் குறைவாகவும், மிக குறுகிய காலத்தில் உருவாக்கக் கூடியதாகவும் அமைகிறது.

செயற்கைக்கோள் ஏவுதல் வாகனங்களாக உருவாக்கப்படும் 3D-பிரிண்டிங் ராக்கெட்டுகள், குறிப்பிட்ட நேரத்துக்குள், குறைந்த பூமி சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களைக் கொண்டுபோய் நிறுத்தி விடுகின்றன.

Advertisement

இப்போது செயற்கை கோள்களைச் சுமந்து செல்லும் 3D-பிரிண்டிங் ராக்கெட்டுகள், எதிர்காலத்தில் விண்வெளி பயணிகளை ஏற்றிக் கொண்டு செவ்வாய் கிரகப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை இந்திய தொழில் நுட்ப கழகத்தைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமே அக்னிகுல் காஸ்மோஸ். இந்த நிறுவனமே, 'சிங்கிள் பீஸ் 3டி-பிரிண்டட் இன்ஜின்' மூலம் இயங்கும் உலகின் முதல் ராக்கெட்டை தயாரித்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.

அக்னிகுல் காஸ்மோஸ் உள்நாட்டிலேயே உருவாக்கிய இந்த ராக்கெட் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப் பட்டது.

உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட, 3டி பிரிண்டட் எஞ்சின் விண்வெளித்துறையில் ஒரு புதிய சாதனை என்று அக்னிகுல் நிறுவனம் அறிவித்துள்ளது.

அக்னிபான் என்று பெயரிடப்பட்ட இந்த ராக்கெட் 30 கிலோ முதல் 300 கிலோ எடையுள்ள செயற்கை கோளுக்கான பேலட்டை குறைந்த புவி சுற்றுப்பாதையில் கொண்டு நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள் மற்றும் திரவ ஆக்சிஜனில் இயங்கும் செமி கிரையோஜெனிக் இன்ஜின் மூலம் இயக்கப்படும் இந்தியாவின் முதல் ராக்கெட் என்ற சிறப்பை பெற்றுள்ளது இந்த அக்னி பான்.

வர்த்தக செயற்கைக்கோள் சந்தையில், உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட "சிங்கிள் பீஸ் 3டி பிரிண்டட் எஞ்சின்" என்று அழைக்கப்படும் இந்த ராக்கெட், இந்திய விண்வெளி துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என்று அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் விண்வெளி பொறியியல் பேராசிரியரும், அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவன ஆலோசகருமான சத்தியநாராயணன்.ஆர்.சக்கரவர்த்தி , "3டி பிரிண்டிங் மூலம், 1,000-க்கும் மேற்பட்ட பாகங்கள் கொண்ட ஒரு இயந்திரத்தை மூன்றே நாட்களில் உருவாக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

ஒரு செயற்கோளை விண்ணில் செலுத்த ஆகும் வணிகச் செலவுகளை இந்த சிங்கிள் பீஸ் 3டி-பிரிண்டட் இன்ஜின் வெகுவாக குறைக்கும் என்றும், அதனால் இந்திய விண்வெளித்துறையின் வருமானம் அதிகரிக்கும் என்றும் தெரிய வருகிறது.

இஸ்ரோ மற்றும் IN-SPACE உதவியுடன், தயாரிக்கப் பட்டுள்ள இந்த 3டி பிரிண்டிங் ராக்கெட் வடிவமைப்பின் வெற்றி, பலராலும் பாராட்டப்படுகிறது. தனியார் விண்வெளித் துறையில் புதுமையான முன்னேற்றங்களுக்கு மத்திய அரசு கொடுத்து வரும் ஆதரவின் காரணமாகவே இது சாத்தியமானது என்று அக்னிகுல் காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

எல்லா இடங்களிலிருந்தும், எந்த நேரத்திலும், மிக குறைந்த விலையில் செலுத்தக்கூடிய வகையில், இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அக்னிகுல் காஸ்மோஸ், செயற்கை கோளை செலுத்தும் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப, மலிவு விலையில் அவர்களுக்கு ஏற்ப பிரத்யேகமான ராக்கெட்டுக்களை உருவாக்கவும் திட்டமுள்ளதாக கூறியிருக்கிறது.

‘அக்னிபான்’, மற்றும் மொபைல் ஏவுதளமான ‘தனுஷ்’, இந்த இரண்டும், ஒன்றுக்கொன்று இணக்கமாக செயல்படும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மொபைல் ஏவுதளத்திலிருந்து எந்த இடத்திலிருந்தும் ஏவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராக்கெட்டுக்கு தனுஷ் என்று பெயரிடப்பட்டுள்ளது. ​​இந்த ராக்கெட்டின் மூலம் 30 கிலோ முதல் 300 கிலோ வரையிலான பேலோடுகளை பறக்கவிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிகுல் காஸ்மோஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் ‘அக்னிபான்' ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியது, விண்வெளி தொழில்நுட்பத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

அக்னிகுல் காஸ்மோஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம், 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தில், புதுமையான, நம்பகமான மற்றும் செலவு குறைந்த ராக்கெட்டை செலுத்தி , தன் விண்வெளி தொழில்நுட்பத் திறமையை நிரூபித்துள்ளது.

விண்வெளித் துறையில், மேலும் பல புதுமையான சாதனைகளை நிகழ்த்தும் எனக் கூறப்படும் அக்னிகுல் காஸ்மோஸ் , IN-SPAce மற்றும்இஸ்ரோவின் உதவியுடன், விண்வெளியை அனைவரும் எளிதில் அணுகக்கூடிய ஒரு இடமாகமாற்றி அமைக்கும் எனவும் விண்வெளித்துறை விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

நாளுக்கு நாள் விண்வெளித் துறையில் இந்தியா, புதிய சாதனைகளைப் படைத்து ,உலகத்தை ஆச்சரியப்பட வைத்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.

Advertisement
Tags :
Advertisement