ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - ரூ. 2, 000 நிவாரணம் அறிவிப்பு!
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த குடிசைகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கருணாநிதி கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டிக்கொள்ள முன்னுரிமையும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசன பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 17 ஆயிரம் ரூபாய் தரப்படும் என தெரிவித்துள்ள அவர்,பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமடைந்திருந்தால் ஹெக்டேருக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மழையினால் பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 8,500 ரூபாயும், உயிரிழந்த பசுக்களுக்கு 37,500 ரூபாயும், வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கு 4,000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.