30 கி.மீ தூரம் தள்ளி சென்று தரையிறங்கிய ராட்சத பலூன்!
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் பறந்த ராட்சத பலூன், 30 கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்று கேரளாவில் தரையிறங்கியதில் நால்வர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
பொள்ளாச்சியில் பத்தாவது முறையாக சர்வதேச பலூன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் ஆச்சிபட்டி மைதானத்தில் இருந்து பறந்த யானை வடிவிலான பிரமாண்ட ராட்சத பலூனில் வெளிநாட்டைச் சேர்ந்த இரு பைலட்டுகளுடன், இரண்டு பெண் குழந்தைகளும் பயணித்தனர். இந்நிலையில் வானில் பறந்த ராட்சத பலூன், 30 கிலோ மீட்டர் தூரம் தள்ளி சென்றது.
அந்த ராட்சத பலூன் கேரளாவின் கன்னிமாரி முல்லந்தட்டில் என்ற பகுதியில் உள்ள வயல்வெளியில் தரையிறங்கியது. இதில் ராட்சத பலூனில் பயணித்த சிறுமிகள் உட்பட நால்வரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பின்னர் உள்ளூர் மக்களின் உதவியுடன் வயல்வெளியில் தரையிறங்கிய ராட்சத பலூன் பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டது.