43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!
அமெரிக்க நீதித்துறையின் வரலாற்று தவறால் சிறைத் தண்டனை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர், 43 ஆண்டுகளுக்குப் பின் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலையான நிலையில், சுதந்திரத்தின் சுவையைச் சுவைப்பதற்கு முன் அவர் மீண்டும் குடியேற்ற தடை சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளார். இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்...
இந்தியாவில் பிறந்தவரான சுப்பிரமணியம் சுபு வேதம், அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்திற்கு அவரது பெற்றோர்களால் 9 மாத குழந்தையாக அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பின் அங்கேயே வளர்ந்த அவர்மீது 1980-களில் LSD போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு அவரை நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் சுப்பிரமணியம் சுபு வேதம், சில காலம் தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் 1983-ம் ஆண்டு தனது முன்னாள் அறைத் தோழரைக் கொலை செய்த வழக்கில் அந்நாட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட வேதத்திற்கு, பென்சில்வேனியா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அதனடிப்படையில் அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், நேரடி சாட்சி, ஆயுதம் மற்றும் கொலைக்கான நோக்கம் நிரூபிக்கப்படாமலேயே வேதத்திற்கு தண்டனை வழங்கப்பட்டதாக அப்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியான புதிய ஆவணங்கள் இந்த வழக்கில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அந்த ஆவணங்களை அலசி ஆராய்ந்தபோது வேதம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் FBI அறிக்கை ஒன்றை வழக்கறிஞர்கள் மறைத்தது வெளிச்சத்திற்கு வந்தது. அந்த அறிக்கை வேதம்மீதான கொலைக் குற்றச்சாட்டினை தவிடுபொடியாக்கியது. அதனடிப்படையில் 43 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பின் அண்மையில் 64 வயதான சுப்பிரமணியம் சுபு வேதத்தை, கொலை வழக்கில் இருந்து பென்சில்வேனியா நீதிமன்றம் விடுவித்தது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தக் காலகட்டத்தில் வேதம் இளங்கலை, முதுகலை என 3 பட்டங்களையும், 4.0 GPA மதிப்பெண்ணுடன் MBA படிப்பையும் முடித்திருந்தார். அமெரிக்க சிறை வரலாற்றில் முதன் முறையாக இப்படியொரு சாதனையைப் படைத்த சுப்பிரமணியம் சுபு வேதத்திற்கு பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 43 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை பெற்ற வேதம் அந்தச் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்குள் காவல்துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
80-களில் பிறப்பிக்கப்பட்ட நாடு கடத்தல் உத்தரவின்பேரில் அவரை கைது செய்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அவரது வழக்கறிஞர் அவா பெனாக், வேதத்தின் நாடு கடத்தல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மொஷானன்வேலி குடியேற்ற காவல் மையத்தில் அடைக்கப்பட்டுள்ள சுப்பிரமணியம் சுபு வேதம், குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்ட பின்னரும், தான் தொடர்ந்து கைதியாகவே இருப்பதாகத் தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வேதம் குற்றமற்றவர் என்பதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவருக்கான சுதந்திரத்தையும் வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமெரிக்காவே தனது வீடு என எண்ணி வாழ்ந்த வேதத்தை மீண்டும் இந்தியா அனுப்புவது, அவரது வாழ்க்கையை முற்றிலுமாகப் பாழாக்கிவிடும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தவறான நீதியின் விளைவாக 43 ஆண்டுகளைச் சிறையில் கழித்த வேதத்தின் வாழ்க்கை, தற்போது உண்மையான சுதந்திரத்தை பெறுவதற்கான மற்றொரு போராட்டமாகவே மாறியுள்ளது.