அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் - 6 முறை சாட்டையால் அடித்து போராட்டத்தை தொடங்கிய அண்ணாமலை!
அண்ணாப்பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமையை கண்டித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் தன்னைத்தானே அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
Advertisement
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில்,மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும் தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும் 48 நாட்களுக்கு விரதம் இருந்து அறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், கோவையில் உள்ள வீட்டின் முன்பு 6 முறை சாட்டையால் அடித்து அண்ணாமலை தனது போராட்டத்தை தொடங்கினார். அப்போது வெற்றி வேல், வீரவேல் என பாஜக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது சாட்டையை தருமாறும் தாங்கும் அடித்து கொள்வதாக கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாட்டையடி தனக்காக அல்ல, சமூகத்தில் உள்ள அவலங்களுக்காக என தெரிவித்தார். இந்த போராட்டம் தனி மனித போராட்டம் அல்ல என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், திமுக ஆட்சியில் இருந்து அகலும் வரை காலணி அணியபோவதில்லை என தெரிவித்தார்.
"FIR வெளியானதன் மூலம் மாணவியின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவால் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுவதாகவும், எனவே பாஜக போராட்டத்தின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அண்ணாமலை கூறினார்.
கண் முன்னால் அடுத்த தலைமுறை அழித்து கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு இருக்கிறோம். கல்வியின் தரம் கீழே வர ஆரம்பித்து இருக்கிறது. போராக இருந்தாலும் கூட ஒரு பெண்ணின் மீது கை வைக்க கூடாது என்பது மண்ணின் மரபு. வரும் காலங்களில் போராட்டங்களை தீவிரப்படுத்த போகிறோம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.