800 ஆண்டு கால போராட்டம் : உரிமைக்குரல் எழுப்பும் மாவோரி இன மக்கள் - சிறப்பு கட்டுரை!
நியூசிலாந்தில் மாவோரிகளின் உரிமைகளைப் பறிக்கும் மசோதாவுக்கு மாவோரி இன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம்100 ஆண்டு கால நியூசிலாந்து அரசியல் வரலாற்றில் 21 வயதான மாவோரி இன இளம் நாடாளுமன்ற உறுப்பினர், மாவோரி மக்களின் பாரம்பரிய பாடலை படி, மாவோரி மக்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி எதிர்ப்பு தெரிவித்த வீடியோ வைரலாகி உள்ளது.
பதினோராம் நூற்றாண்டில், மாவோரி இன மக்கள் நியூசிலாந்தில் குடியேறினர். ஆரம்பத்தில், மாவோரி இன மக்கள் கிராமப்புறங்களில் மட்டுமே வாழ்ந்து வந்தனர்.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மாவோரிகள் மக்கள்தொகை சுமார் 1 மில்லியனாக இருந்தது. மாவோரிகள் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலே பிரதான வாழ்வாதாரமாக இருந்து.பல்வேறு பழங்குடி சமூக குழுக்களுக்கு இடையே நீடித்த போரில் பலர் இறந்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், மாவோரிகள் மக்கள் தொகை 40,000க்கு குறைந்த நிலையில், ஆங்கிலேயர்களின் வருகை, மாவோரி இன மக்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்தது. இன்றும்,ஆண்டுதோறும், பிப்ரவரி 6 ஆம் தேதி, வைதாங்கி(WAITANGI TREATY) ஒப்பந்தம் நாளாக கொண்டாடப் படுகிறது.
நியூசிலாந்தின் வரலாற்றில் வைதாங்கி(WAITANGI TREATY) ஒப்பந்தம் மிக முக்கியமானதாகும். 1840ம் ஆண்டு இங்கிலாந்து அரசுக்கும் மாவோரி மக்களுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதிகார பரிமாற்றம், சட்ட பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாகும்.
வைதாங்கி ஒப்பந்தம் உருவான போது, சுமார் 2,000 ஆங்கிலேயர்கள் நியூசிலாந்தில் இருந்தனர். அதாவது மொத்த மக்கள் தொகையில் சுமார் 1 சதவீதம் மட்டுமே ஆங்கிலேயர்கள். எனவே,இந்த ஒப்பந்தம் தொடர்பாக, நீண்ட காலமாகவே, மாவோரிகளுக்கும் நியூசிலாந்து அரசுக்கும் இடையே பலவகையான சர்ச்சைகள் தொடர்கின்றன.
1854ம் ஆண்டு நியூசிலாந்து போர், தரானகியில் உள்ள வைதராவில் தொடங்கியது. 12 ஆண்டுகள் நீடித்த போரில் நியூசிலாந்து அரசு, மாவோரிகளின் நிலங்களை அபகரித்தது. சுமார் 3.25 மில்லியன் ஏக்கர் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நிலப் போர்களுக்குப் பிறகு, வைதாங்கி ஒப்பந்தத்தின் மீதான விவாதங்களை மீண்டும் தொடங்கவும், அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டெடுக்கவும் மாவோரிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
1894ம் ஆண்டு, நியூசிலாந்து நாடாளுமன்றத்தில், மாவோரி உரிமைகள் மசோதா அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த மசோதா மாவோரிகளுக்கு, அவர்களின் சொந்த நிலங்கள், மீன்வளம் மற்றும் பிற உணவு வளங்களின் மீது உரிமையை வழங்குகிறது. ஆனால், அடுத்த 2 ஆண்டுகளில் இந்த மசோதா நிராகரிக்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் பல்வேறு காலக் கட்டத்தில், மாவோரிகளின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நியூசிலாந்து செல்வச் செழிப்பான நாடானது. மாவோரிகள் வேலைவாய்ப்பைத் தேடி நகரங்களுக்கு இடம்பெயரத் தொடங்கினர். 1990ம் ஆண்டு முதல் 80 சதவீதத்துக்கும் அதிகமான மாவோரிகள் நகர்ப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
2013 ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நியூசிலாந்தில், 5 லட்சத்து 98,605 மாவோரிகள் வாழ்கின்றனர். நியூசிலாந்தின் மொத்த மக்கள் தொகையில் இது 14.9 சதவீதம் ஆகும்.
நியூசிலாந்தில் வாழும் மொத்த மாவோரிகளில் 46.5 சதவீதம் பேர் தனித்த மாவோரி இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிற இனங்களுடன் சேர்ந்த கலப்பினமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில், இந்த வைதாங்கி(WAITANGI TREATY) ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய ஒரு சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாவோரி இன நாடாளுமன்ற உறுப்பினர் ஹனா மாவோரி இன மக்களின் பாரம்பரிய பாடலைப் பாடியவாறு, மாவோரிகளின் பாரம்பரிய ஹாக்கா நடனத்தை ஆடியவாறு, மசோதாவின் நகலை கிழித்தெறிந்தார்.
அவருடன் மற்ற மாவோரி இன நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதே பாடலைப் பாடி,ஆடி தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த ஆவேச எதிர்ப்பு காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்நிலையில், நியூசிலாந்தின் நாடாளுமன்றத்துக்கு வெளியே சுமார் 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடி எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். வைதாங்கி ஒப்பந்தத்தை சீரமைக்கும் சர்ச்சைக்குரிய புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக் கணக்கான மாவோரி இன மக்கள், நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனை நோக்கி பேரணியாக வந்துள்ளனர்.
அனைத்து வயது மாவோரி இன மக்கள், பாரம்பரிய மௌரி ஆடைகளை அணிந்து, மௌரிக் கொடியை ஏந்திய படி,மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த சூழலில்,இந்த மசோதா சட்டமாகாது என்று நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உறுதியளித்துள்ளார்.
கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக, வீரியம் குறையாமல், அரசியலமைப்பு விதிகள் மூலம் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க மாவோரிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள் என்பது உலகையே யோசிக்க வைக்கிறது.